

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றுதொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.
இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜூலை 31-ம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4-வது ஞாயிற்றுக்கிழமை
இந்நிலையில் தமிழகத்தில்இன்று 4-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இன்று பால் விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், மருத்துவ வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய காரணங்களின்றி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், காய்கறி, மளிகை கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடைகளிலும், மீன் கடைகளிலும் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் குவிந்தனர். சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் வருகை தடுக்கப்பட்டாலும் மீன் வியாபாரிகள் நெருங்கி நின்று மீன் வாங்கிச் சென்றனர்.
முன்னதாக, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜூலைமாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தளர்வில்லா ஊரடங்கின் கட்டுப்பாடுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படவில்லை.
பாதிப்பு அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு ஆலோசித்துவரும் நிலையில் இன்று கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.