Published : 26 Jul 2020 07:48 AM
Last Updated : 26 Jul 2020 07:48 AM

நிலஅளவை, கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்வு: மறுஅளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வால் மக்கள் அதிர்ச்சி

சென்னை

நில அளவை உட்பிரிவு, கிராம,வட்ட, மாவட்ட வரைபடங்கள்,புலப்பட நகல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள், தங்கள் நிலத்தைஅளந்து உட்பிரிவு செய்யவும், நில உரிமையாளர்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, அளவீடு செய்யப்பட்ட நிலத்தை மேல்முறையீடு அடிப்படையில் மறுஅளவீடு செய்வது என பல்வேறு பணிகளை வருவாய்த் துறையின்கீழ் செயல்படும் நில அளவைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்களும் நில அளவைத் துறையால் குறிப்பிட்ட கட்டணத்துக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கட்டணங்களை உயர்த்த வருவாய்த் துறை முடிவெடுத்தது. அதன்படி,மத்திய நில அளவை அலுவலகஇணை இயக்குநர் தலைமையில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, கட்டணங்கள் பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து, கட்டணங்களை உயர்த்தி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசாணை விவரம்

அதன்படி, புல அளவீட்டு புத்தகப் பிரதி பெற பக்கம் ஒன்றுக்கு ஏ-4 அளவுக்கு ரூ.20-லிருந்து 50 ஆகவும், ஏ-3 அளவுக்கு ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20 லிருந்து 10 மடங்காக 200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட ரூ.30-லிருந்து ரூ.300 ஆகவும், நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50 லிருந்து 8 மடங்காக 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் பாகப்பிரிவினைக்கு முன் நில உரிமையாளரின் விண்ணப்பத்தின்பேரில் எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலத்துக்கு ரூ.30லிருந்து 33 மடங்கு உயர்த்தி ரூ.1,000 ஆகவும், நன்செய் நிலத்துக்கு ரூ.50லிருந்து 40மடங்கு உயர்த்தி ரூ.2,000 ஆகவும்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டின் பேரில் மறுஅளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலத்துக்கு ரூ.60லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், நன்செய் நிலத்துக்கு ரூ.60 லிருந்து ரூ.4,000 ஆகவும் அதாவது 66 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நில அளவை குறியீட்டின் முன்பணம் அதாவது செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 சதவீதத்தில் இருந்து 800சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வரைபடங்களின் விலையைப் பொறுத்தவரை வண்ண மாவட்ட வரைபடம் ரூ.189-லிருந்து ரூ.500 ஆகவும், எல்லைக்கோடு ரூ.51-லிருந்து ரூ.300 ஆகவும், வட்ட வரைபடம் (வண்ணம்) ரூ.357-லிருந்து ரூ.1,000 ஆகவும், வட்ட வரைபடம் எல்லைக்கோடு ரூ.51-லிருந்து ரூ.500 ஆகவும், நகர பிளாக் வரைபடம் ரூ.27-லிருந்து ஒரு டி.எஸ் எண்ணுக்கு ரூ.50 என்றும், கிராம வரைபடம் ரூ.85-லிருந்து ரூ.200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்தில் ரூ.40-லிருந்து 400 ஆகவும், நகராட்சிகளில் ரூ.50-லிருந்து ரூ.500 ஆகவும், மாநகராட்சியில் ரூ.60-லிருந்து ரூ.600 ஆகவும் என 10 மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கட்டணங்களைப் பொறுத்தவரை முன்னதாக, 1987-ம் ஆண்டுபழைய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 2002-ம்ஆண்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கட்டண உயர்வுஉடனடியாக அமலுக்கு வருவதாகவருவாய்த் துறை செயலர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அதற்கானமென்பொருளில் மாற்றம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கும்படி நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் செல்வராஜ் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென கட்டணத்தை உயர்த்தியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x