Published : 26 Jul 2020 07:20 AM
Last Updated : 26 Jul 2020 07:20 AM

நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கை தீவிரம்; ஜெயலலிதா வசித்த வீடு அரசுடைமையானது: உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.68 கோடி செலுத்தியது அரசு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையாக அந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக உரிமையியல் நீதிமன்றத்தில் ரூ.67.88 கோடியை அரசு செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா நிலையம்’ இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, மயிலாப்பூர் வட்டத்தில் உள்ள வேதா நிலையத்தின் 10 கிரவுண்ட் 322 சதுரடி நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. இதற் காக, 2018-ல் ரூ.35 லட்சத்து 34 ஆயிரத்து 388 நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நில நிர்வாக ஆணையரால் அமைக்கப்பட்ட சமூக தாக்க மதிப்பீட்டு முகமை, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியது. குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை இல்லாததால் சமூக தாக்க திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கேள்வி எழவில்லை. சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் இல்லாததால் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையும் இல்லை என்று மதிப்பீட்டு முகமை தெரிவித்தது.

அதன்பின், மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இறுதி சமூக தாக்க மதிப்பீட்டு அறிக் கையை கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வழங்கியது. அந்த அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வேதா நிலையம் இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க, ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனம்’ அமைக்க கடந்த மே 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அறநிறுவனத்தில் முதல்வர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சர், நிதி மற்றும் செய்தித்துறை செயலர், செய்தித்துறை இயக்குநர், அருங்காட்சியகங்கள் இயக்குநர், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர், அரசால் பரிந்துரைக்கப் பட்ட 4 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வேதா நிலையத்தை அரசு நினை வில்லமாக மாற்றுவதற்கு தோராய தீர்ப்பாணைத் தொகையான ரூ.67 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 225-ஐ ஒதுக்கி மே 26-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின், நில எடுப்புச் சட்டத்தின் படி கூடுதல் சந்தை மதிப்பு சேர்த்து மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690 என கணக்கீடு செய்யப்பட்டு, அதற்கான மீத இழப்பீட்டுத் தொகையும் ஒதுக்கப்பட்டது. நில எடுப்புச் சட்டத்தின்கீழ் உரிமை கோருபவர்கள் தங்கள் கோரிக் கையை நில எடுப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க ஜூலை 3-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் பரிந்துரை

மேலும், வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பாக புகழேந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த மே 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ‘வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற பரிசீலிக்கலாம். ஒரு பகுதி யை நினைவு இல்லமாகவும், மற் றொரு பகுதியை முதல்வரின் அதி காரப்பூர்வ இல்லம் மற்றும் அலு வலகமாக மாற்ற பரிசீலிக்கலாம்’ என பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப் பட்டு, ‘முதல்வரின் இல்லமாக மாற்ற சாத்தியக்கூறுகள் இல்லை’ என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690, நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா நிலையம் அமைந்துள்ள சொத்து அரசின் சொத்தாகியுள்ளது.

எனவே, வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லம், அது அமைந்துள்ள நிலம் ஆகியவை ஜூலை 22-ம் தேதி நில எடுப்பு அலுவலரால் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வேதா நிலையம் இல்லம், அமைந்துள்ள நிலம் மற்றும் அங்குள்ள பொருட்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் ‘புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாரிசுகளுக்கு வேண்டுகோள்

சென்னை மாதவரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஜெ.தீபா கூறியுள்ளாரே’ என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்பது தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி, மாற்றுக்கட்சியினரும் வைத்த கோரிக்கையாகும். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றத்தில் ரூ. 68 கோடி டெபாசிட் செய்துள்ளோம். தீபா நீதிமன்றம் செல்வதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதுதான் எங்கள் கடமையும் உரிமையும். எனவே, வாரிசுகள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x