Published : 25 Jul 2020 10:59 PM
Last Updated : 25 Jul 2020 10:59 PM

தமிழக அரசை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை: குஷ்பு

சென்னை

கரோனா தொற்று அதிகரிப்புக்கு தமிழக அரசை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,988 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,06,737 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,329 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சென்னையைத் தாண்டி இதர மாவட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும் கரோனா பயம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த கரோனா தொற்றின் அதிகரிப்பு தொடர்பாக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்று மட்டும் 6,988 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1363 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏன் இவ்வளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. அரசாங்கம் சொல்வதை நாம் கேட்கிறோமா?.

மாஸ்க் போடுங்கள், சமூக இடைவெளியை கடைப் பிடியுங்கள் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் பண்ணுகிறோமா. மாஸ்க் போடுகிறார்கள். அதுவும் ஸ்டைலாக போடுகிறார்கள். மாஸ்க் ஏன் என்றால் பக்கத்தில் இருப்பவர்கள் காற்றையே நீங்கள் சுவாசிக்க வேண்டாம் என்று தான் போடுகிறோம். மாஸ்க் போடும் போது உங்கள் மூக்கு, வாய் முழுமையாக மறைப்பது போல் இருக்க வேண்டும்.

சமூக இடைவெளி ஏன் என்றால் தொட்டுப் பேச வேண்டாம் என்பதற்காகத் தான். இது கஷ்டமான விஷயம். இன்றைக்கு இந்த கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டால் தான், நிச்சயமாக நாளைக்கு நாம் நன்றாக இருப்போம். அது தான் நமக்கு புரிய மாட்டிக்குது. கரோனா தொற்று குறைய வேண்டும் என்றால் அரசாங்கம் சொல்வதை நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும்.

பொறுப்புள்ள மக்களாக நாம் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேளுங்கள். அது தவறில்லை. அதற்கு முன் நாம் என்ன தவறு செய்கிறோம் என்று தட்டிக் கேளுங்கள். அந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் கிடைத்தது என்றால் நிச்சயமாக நம்மால் கரோனாவை ஒழிக்க முடியும். கரோனாவை வென்றிடுவோம்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x