விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை; தென்காசி மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும்- ஆட்சியருக்கு திமுக கோரிக்கை

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை; தென்காசி மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும்- ஆட்சியருக்கு திமுக கோரிக்கை
Updated on
1 min read

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் இந்திய பருத்திக் கழக இயக்குநர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், மேல நீலிதநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஒன்றியங்கள், வாசுதேவநல்லூர், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். கரிசல் மண் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பருத்தி நல்ல மகசூல் தருகிறது.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்கவில்லை.

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு குவிண்டால் நல்ல பருத்தியை 3 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால் இந்திய பருத்தி கழகம் மூலம் டெல்டா மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குவிண்டால் பருத்தியை 5 ஆயிரம் முதல் 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து வாங்குகிறார்கள். தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

ஈரப்பதம் அதிகமுள்ள பருத்தியே 5200 ரூபாய் வரை இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்கிறது. எனவே, பருத்தி விவசாயிகளின் நலன் கருதி தென்காசி மாவட்டத்திலும் இந்திய பருத்திக் கழகத்தின் கிளையை அமைத்து அதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்து, விவசாயிகள் விளைவிக்கும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in