

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.96.77 கோடி மதிப்பீட்டில் விமான ஓடுதளம் விரிவாக்கம், விமானங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
விமான நிலையம் அமைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் இனி தூத்துக்குடிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு 5 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் என 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தினமும் சராசரியாக 700 பயணிகள் பயணித்து வந்தனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சென்னைக்கு மட்டும் தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென்மாவட்ட மக்களின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 600.97 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் அண்மையில் இலவசமாக கொடுத்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் படிப்படியாக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இரவு நேர விமான சேவைக்கான வசதி செய்யப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 3-ம் தேதி முதல் இரவு நேர விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான விரிவாக்க பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ரூ.96.77 கோடி மதிப்பிலான இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதில் விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். கட்டுமானப் பிரிவு இணைப் பொதுமேலாளர் ஏ.ராதாகிருஷ்ணன், எலக்ட்ரீக்கல் பிரிவு உதவி பொதுமேலாளர் கே.ஜி.பிஜூ, விமான போக்குவரத்து பிரிவு உதவி பொதுமேலாளர் சுப்ரவேலு, தகவல் கட்டுப்பாட்டு பிரிவு துணை பொதுமேலாளர் அனுசியா, விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன், தீயணைப்பு துறை மேலாளர் பி.கணேஷ், காவல் ஆய்வாளர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான நிலைய இயக்குநர் சிப்பிரமணியன் கூறும்போது, தற்போதுள்ள 30 மீட்டர் அகலம் 1350 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், 45 மீட்டர் அகலம் 3115 மீட்டர் நீளம் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். மேலும், 23 மீட்டர் அகலம், 344 மீட்டர் நீளம் கொண்ட விமானங்கள் திரும்பும் பாதை, ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தி வைக்கும் அளவில் விமானங்கள் நிறுத்துமிடம், விமானத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், அந்த விமானத்தை தனியாக நிறுத்தி வைக்கும் வசதி போன்ற பணிகள் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
தூத்துக்குடி விமான நிலையம் தொடங்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு விமான ஓடுதளம் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் 18 மாதங்களில் முடிவடையும். விமான ஓடுதளம் விரிவாக்க பணிகளுக்காக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை விமான நிலைய ஓடுதளம் மூடப்படும். இரவு நேர சேவைகள் நடைபெறாது என்றார் அவர்.