Published : 25 Jul 2020 08:33 PM
Last Updated : 25 Jul 2020 08:33 PM

கரோனா ஊரடங்கால் 4 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் பேருந்து நிலையக் கடைகள்: ஏல நிபந்தனையைத் தளர்த்தி வாடகை தள்ளுபடி செய்யப்படுமா?

கரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக பேருந்துகள் எதுவும் ஓடாததால் பேருந்துநிலைய கடைகளை வியாபாரிகள் திறக்காததால் அவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அதனால், பேரிடர் கால நிவாரணமாக நிபந்தனைகளைத் தளர்த்தி பஸ்கள் ஒடாமல் கடைகள் திறக்கப்படாத இந்த 4 மாதத்திற்கான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பேருந்துநிலையக் கடைகள், மார்க்கெட்டுகள், சைக்கிள் ஸ்டேண்ட்டுகள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகக் கடைகள் வாடகை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மிகப்பெரிய வருவாய் இனமாக உள்ளன.

பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்வதால் பஸ்நிலையம் கடைகள் வாடகை, வெளி இடங்களில் உள்ள மற்ற கடைகள் வாடகையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற பெரிய மாநகராட்சிகளிலும், தொழில் நகரங்களிலும் பேரூந்துநிலைய கடை வாடகை உச்சமாக இருக்கும். பஸ்நிலையங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை, அவர்களுக்கு விற்கும் பொருட்களின் கூடுதல் விலையை கொண்டே வியாபாரிகள் இதுவரை உள்ளாட்சி நிர்வாகளுக்கு வெளியிடங்களை விட கூடுதல் வாடகை செலுத்தி வந்தனர்.

கடந்த 4 மாதமாக பஸ்கள் ஓடாததால் மக்கள் வெளியே வராமல் உள்ளாட்சி நிர்வாகங்களில் கடைகள் மட்டுமில்லாது ஏலம் எடுத்த அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுவும் பேரூராட்சி போன்ற சிறிய நகரங்களில் உள்ள பஸ்நிலைய கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அதனால், கடந்த 4 மாதமாக வியாபாரிகள் கடை வாடகையை உள்ளாட்சி நிர்வாகங்ளுக்கு கட்டவில்லை.

கடந்த காலங்களில் 2 மாதம் வாடகை தவறினாலே நோட்டீஸ் விட்டு கடையை அடைக்க வரும் அதிகாரிகள் தற்போது கரோனா பேரிடர் காலம் என்பதால் அவர்களும் கடை வாடகையை எப்படிக் கேட்டுப் போவது என்று வியாபாரிகளுக்கு வாடகையை கட்ச்ட சொல்லி நெருக்கடி கொடுக்கவில்லை.

ஆனால், விரைவில் பஸ்கள் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்நிலையில் பஸ்கள் ஓடத்தொடங்கினால் வழக்கம்போல் அதிகாரிகள் மீண்டும் கடைகள் திறக்கப்படாத காலத்திற்கும் சேர்த்து வாடகை செலுத்த கட்டாயப்படுத்துவார்கள். நெருக்கடி கொடுத்து நோட்டீஸ் விட்டு சீல் வைப்பார்கள் என வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலைய கடை வியாபாரிகள் கூறியதாவது:

பொதுவாக பஸ்நிலையம் கடைகள், வணிக வளாகம் கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட்டுகள் மற்றும் கழிப்பறைகள் ஏலம் எடுக்கும்போது 26 நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் கடைகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் வாடகைக்கு கொடுப்பார்கள்.

புயல், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் தொழில் பாதிக்கப்பட்டால் கடை வாடகை கொடுக்கும் பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொள்வதாக கூறிதான் வியாபாரிகள் ஏலம் எடுப்பார்கள். கரோனா ஊரடங்கை காரணம் சொல்லி நாங்கள் வாடகையை கட்டாவிட்டாலும் நாங்கள் வழங்கியடெபாசிட் தொகையில் இருந்து எடுத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இருக்கிறது.

பேருந்துநிலைய கடைகள் மட்டுமில்லாது காய்கறி மார்க்கெட்கள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதுபோல் பூங்காக்களுக்கு மக்கள் வராமல் அந்தத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

டூவீலர் ஸ்டாண்டுகளுக்கு பைக்குகள் வராமல் அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், உள்ளாட்சி நிர்வாகங்களில் ஏலம் எடுத்த அனைத்து வியாபாரிகளுமே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர்.

இதுநாள் வரையில் கடைகள் பக்கமே செல்லவில்லை. கடை வியாபாரமும் நடக்கவில்லை. யாராலும் கடந்த 4 மாதம் வாடகையைக் கட்ட முடியாது. அரசு, ஏல நிபந்தனைகளைத் தளர்த்தி இதற்குத் தீர்வு காண வேண்டும், ’’ என்றனர்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்டபோது, ‘‘எது நியாயமோ அதை அரசு முடிவெடுக்கும். மேலும், தற்போது கரோனா தொற்று நோயை ஒழிப்பதில் எல்லோரும் கவனமாகச் செயல்படுகிறோம். இந்த சூழலில் கடைகள் வாடகையைப் பற்றி எதுவும் ஆலோசிக்கப்படவில்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x