

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கரோனா அச்சத்தால் பள்ளத்தூர் காவல்நிலையம் விநாயகர் கோயிலில் செயல்பட்டது.
காரைக்குடி அருகே பள்ளத்தூர் காவல் நிலையத்தில் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலையம் முழுவதும் இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா அச்சத்தால் இன்று முழுவதும் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் காவலர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவலர்களுக்கு தொற்று பரவி வருவதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் இறந்துள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகளில் கரோனா தொற்றை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன.