

மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத, திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை 42-வது வார்டு கரட்டாங்காடு அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலை, நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருப்பதைக் கண்டித்தும், தொடர் விபத்துக்கு வழிவகுப்பதைக் கண்டித்தும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று (ஜூலை 25) மாலை ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென மாநகராட்சி அதிகாரிகள், சாலையை செப்பனிடும் பணியை உடனடியாக செய்து முடித்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
இது தொடர்பாக பாஜகவினர் கூறும்போது, "நீண்ட நாட்களாக சரி செய்யப்படாத நிலையில் மாநகரின் பிரதான சாலை இருந்து வந்தது. விபத்துகளும், அதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுவதை முன்கூட்டியே மாநகராட்சி அறிந்திருந்தது. உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மாநகராட்சியில் மனு அளித்தோம்.
இந்நிலையில் திடீரென ஆர்ப்பாட்டம் அறிவித்த பின்னர், உடனடியாக அலுவலர்கள் ஓடோடி வந்து பணிகளை செய்கின்றனர். இதுபோன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளில் மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்" என்றனர்.
குடியிருப்புப் பகுதியில் படகு சேவை: ஆம் ஆத்மி விருப்பம்
திருப்பூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுந்தரபாண்டியன், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாருக்கு இன்று அனுப்பிய மனுவில், "மாநகரப் பகுதிகளில் சிறு மழை பெய்தாலே மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து குளம் போல் பல்வேறு இடங்களில் காட்சி அளிக்கின்றன. திருப்பூரில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மழைக் காலத்தில் பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்புபோது இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, கட்டணமில்லா படகு சேவையை மழை காலத்தில் மாநகராட்சி தொடங்க வேண்டும். அப்படி எதுவும் செய்ய இயலாத பட்சத்தில், மழைநீர் மற்றும் கழிவுநீர் வசதியை மாநகராட்சி ஏற்பாடு செய்து தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.