Published : 25 Jul 2020 05:42 PM
Last Updated : 25 Jul 2020 05:42 PM

பேராசிரியை  கொலை வழக்கு: வழக்கை தாமதப்படுத்த குற்றவாளிகள்  முயற்சி: 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை பேராசிரியை கொல்லப்பட்ட வழக்கில் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த குற்றவாளிகள் தரப்பு முயற்சிப்பதால் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியை கிருஷ்ணவேணி தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ஜெய் என்கிற கதிரவன், ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகியோரும், மேலும் இரண்டு சிறார்களும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஒன்பது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, ஆறு ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை நீதிமன்ற வழக்கின் விசாரணையை திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என குற்றம்சாட்டப்பட்ட ஜெய், ஜீவா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, இருவர் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர், “புகார்தாரரான ஜெயவேல் (கிருஷ்ணவேணியின் தம்பி) திருவண்ணாமலையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதால், தங்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், விழுப்புரத்திலிருந்து ஆஜராக வந்த வழக்கறிஞரையும் ஆஜராகவிடாமல் தடுத்ததால், வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்பதால் விசாரணையை மாற்ற வேண்டும்”. என வேண்டுகோள் வைத்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எதிராக பிணையில் விட முடியாத பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் சாட்சிகளை விழுப்புரத்திற்கு வரவழைத்தால் வீண் மன உளைச்சலும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணவேணியின் சகோதரர் ஜெயவேலு தரப்பில், “வழக்கறிஞர் சங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு ஆஜராகக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றவோ, மற்ற வழக்கறிஞர்கள் நீதி மன்றப்பணி செய்ய விடாமல் தடுக்கவோ முயலவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 2015-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2019-லிருந்து சாட்சிகள் விசாரணை நடந்து வருவதால் வழக்கு விசாரணையை தாமதப் படுத்தவே இந்த வழக்கு தாக்கல் செயப்பட்டுள்ளதாக தெரிவித்து, பிடியாணை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பதனை சுட்டிக் காட்டினார். பின்னர் வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கிருஷ்ணவேணி கொலை வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x