

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியதாவது:
"தற்போதைய பொருளாதார சூழலில், தனி நபர் இடம் வாங்கி, தனி வீடு கட்டி குடியிருப்பது சவாலாக இருப்பதால், பெரும்பாலான நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அடுக்குமாடி குடியிருப்பை நாடியுள்ளனர். தற்போது கோவையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுக்குமாடிகளில் சேரும் குப்பை, கழிவுகளை அகற்றுவதை உள்ளாட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக நிறுத்திவிட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் ரூ.60 முதல் ரூ.70 வரை கட்டணம் செலுத்தி, தனியார் நிறுவனத்துடன் கழிவு மேலாண்மை செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதன் மூலம் மாதத்துக்கு சுமார் ரூ.28 லட்சம் என, ஆண்டுக்கு சுமார் ரூ.3.36 கோடி தனியார் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியிருக்கிறது.
மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது நடுத்தர குடும்பத்தினருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி மூலமாகவே குப்பையை நேரடியாக எடுத்துக் கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"
இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.