

தமிழக கர்நாடக எல்லை பகுதியான பாலாறு அருகில் சுரக்காமடுவு உள்ளது. கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்ட சரக்காமடுவு பச்சைமலை வனப் பகுதியில் 2 யானைகள் இறந்து கிடப்பதாக நேற்று இரு மாநில வனத் துறையினருக்கும் தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற இரு மாநில வனத் துறையினரும் ஆய்வு செய்தபோது, சுரக்காமடுவு வனப் பகுதியில் இரண்டு ஆண் யானைகளை சுட்டுக் கொன்றும் அதன் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இரண்டு வாரத்துக்கு முன்னரே இரு யானைகளும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், உடல் அழுகிய நிலையில் இருந்தன. சம்பவ இடத்திலேயே இரண்டு யானைகளின் உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. பிரேதப் பரிசோதனையில் யானை கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், ஒரு யானையின் நெற்றி யில் 2 தோட்டாக்களும், மற்றொரு யானையின் நெற்றியில் 3 தோட்டாக் களும் இருப்பது தெரியவந்தது.
யானையைக் கொன்று தந்தங் களைக் கடத்திய கும்பல்குறித்து இரு மாநில வனத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு மாநில எல்லை வனப் பகுதியிலும் வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரடிப்படை தீவிரம்
தமிழக சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி கருப்புசாமியிடம் கேட்டபோது, ‘‘கர்நாடக மாநிலம் சுரக்காமடுவு பகுதியில் உள்ள பச்சைமலை வனத் தில் யானையைக் கொன்று, தந்தம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக எல்லைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலை யில், தமிழக வனப் பகுதியில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு, யானை தந்தங்களைக் கடத்திய கும்பலைத் தேடி வருகிறோம்” என்றார்.