

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 166 பகுதிகளில் மக்கள் நடமாடவும், கடைகளைத் திறக்கவும் இன்று (25ம் தேதி) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க இயலாத நிலையில், நோய்த் தொற்று அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 166 பகுதிகளில் மக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் இன்று (25ம் தேதி) முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ராஜபாளையம் பகுதியில் செட்டியார்பட்டி, கலிங்கப்பேரி கிருஷ்ணாபுரம், சோலைச்சேரி, புதூர், சம்சிகாபுரம், தளவாய்புரம், முகவூர் உள்ளிட்ட 27 பகுதிகளிலும் , ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம், காவலர் குடியிருப்பு, வன்னியம்பட்டி, மாதாகோவில் தெரு, ரைட்டன்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட 9 பகுதிகளிலும், வத்திராயிருப்பு அருகே, காடனேரி, அரசபட்டி, வெள்ளாளர் நடத்துதெரு, வடக்குத்தெரு, வன்னியர்தெரு, நடுத்தெரு, மீனாட்சிபுரம், மேலகோபாலபுரம், நத்தம்பட்டி உள்ளிட்ட 11 பகுதிகளிலும் நோய்த் தொற்று குறையும் வரை பொதுமக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சிவகாசி பகுதியில் சசிநகர், அய்யனார் காலனி, ஆசாரி காலனி, சிலோன் காலனி, முத்துராமலிங்காபுரம், சாமிபுரம் காலனி, பூலாவூரணி, விஸ்வநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட 13 பகுதிகளிலும் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டி, வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், வாழமரத்துப்பட்டி, புலிப்பாறைபட்டி உள்ளிட்ட 7 பகுதிகளிலும், சாத்தூர் பகுதியில் தென்றல் நகர், பெருமாள்கோயில்தெரு, தென்வாடல் புதுத்தெரு, உப்பத்தூர், பாரதி நகர் உள்ளிட்ட 10 பகுதிகளிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகரில் அண்ணாமலை செட்டியார் காலனி, மொன்னிதெரு, பர்மா காலனி, என்ஜிஓ காலனி, ரயில்வே பீடர் சாலை, அய்யனார் நகர், சூலக்கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, மெட்டுக்குண்டு, அம்பேத்கர்நகர், கணேஷ் நகர், ரோசல்பட்டி உள்ளிட்ட 25 பகுதிகளிலும், அருப்புக்கோட்டையில் ஆலடிப்பட்டி, கொப்புசித்தம்பட்டி, சொக்கலிங்கபுரம், வேலாயுதபுரம், திருநகரம் உள்ளிட்ட 35 பகுதிகளிலும், திருச்சுழி அருகே இலுப்பையூர், பனைகுடி, கிழக்குத் தெரு, நரிக்குடி, மிதிலைக்குளம், ஏ.முக்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளிலும், காரியாபட்டி பகுதியில் கல்குறிச்சி பாரதிநகர், அண்ணாநகர், கே.கே.நகர், ஆவியூர் காலனி தெரு, மேலத்தெரு, கிழக்குத் தெரு, கீழஇடையன்குளம் உள்ளிட்ட 14 பகுதிகளிலும் நோய் தொற்று குறையும் வரை பொதுமக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.