

கரோனா காலம் என்பதால் தந்தைக்கு வேலை கிடைக்காததால், வீட்டை காலி செய்துவிட்டு சாலையோரத்தில் தம்பதியர் தங்கியுள்ளனர். அவர்களது 3 குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த நிலையில் அவர்கள் மூவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, திருப்பூர் 'சைல்டு லைன்' (Child Line) அமைப்பினர் கூறியதாவது:
"திருப்பூர் புஷ்பா திரையரங்கப் பகுதியில் 3 குழந்தைகள் பிச்சை எடுப்பதாக, திருப்பூர் 'சைல்டு லைன்' அமைப்புக்குத் தகவல் வந்தது. 'சைல்டு லைன்' நிர்வாகிகள் அங்கு சென்று, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 7, 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளையும், 10 வயதுடைய ஒரு ஆண் குழந்தையையும் மீட்டனர்.
பின்னர் குழந்தைகளிடம் நடத்திய விசாரணையில், அவர்களுடைய பெற்றோர்கள் குமரன் சிலை அருகில் சாலையோரத்தில் கடந்த ஒரு மாதமாக தங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்று, குழந்தைகளின் பெற்றோரான பாபு, மஞ்சு ஆகியோரிடம் விசாரித்ததில், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வந்ததாக தெரிவித்தனர்.
ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். தற்போது, தந்தை பாபு காசநோயால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், தொடர்ந்து வீட்டு வாடகையும் கட்ட முடியாத நிலையில், அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு திருப்பூரில் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்தனர். கரோனா வைரஸ் பரவலால் தற்போது வரை வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
மேலும், மூன்று வேளை உணவுக்கே மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்ததாகவும், இனிமேல் குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தைகள் மூவரும், குழந்தைகள் நலக்குழு மூலமாக தற்காலிகமாக காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்"
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.