Last Updated : 25 Jul, 2020 03:52 PM

 

Published : 25 Jul 2020 03:52 PM
Last Updated : 25 Jul 2020 03:52 PM

மதுரையில் 3-வது கேந்திரிய வித்யாலயா பள்ளி: மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டே தொடங்கக் கோரிக்கை

மதுரை

தமிழ்நாட்டில் 6 வகையான பள்ளிகள் இருக்கின்றன. அரசுப் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டத்தைப் பின்பற்றும் மெட்ரிக் பள்ளிகள், அதைப் பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள், மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கேந்திரிய பள்ளிகள், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேசப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் குளோபல் பள்ளிகள்.

இந்தப் பட்டியலில், மாநிலப் பள்ளிகளைவிட, மத்தியப் பள்ளிகள் தரமானவை என்றும், மத்தியப் பள்ளிகளைவிட சர்வதேசப் பள்ளிகள் தரமானவை என்றும் நம்பப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு பள்ளி, நடுத்தர வர்க்கத்தினருக்கு வேறு பள்ளி, உயர் வர்க்கத்திற்கு வேறு பள்ளி என்ற வேறுபாடு இருக்கிறது.

மத்தியப் பள்ளிகளில் ஏழை, நடுத்தர வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வாய்ப்புத்தான் இருக்கிறது. அது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். மத்திய அரசுப் பணி மற்றும் ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்காகவே இந்தப் பள்ளிகள் என்ற போதிலும், உள்ளூர்ப் பிள்ளைகளையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்கின்றன அந்தப் பள்ளிகள்.

தமிழ்நாட்டில் மொத்தமே 44 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே இருப்பதால், இவற்றில் பிள்ளைகளைச் சேர்க்கக் கடும் போட்டி நிலவுவது வழக்கம். சென்னையில் நிறையப் பள்ளிகள் இருக்கும் நிலையில், மதுரையில் வெறும் இரண்டு கேந்திரிய பள்ளிகள் மட்டும் (நரிமேடு, திருப்பரங்குன்றம்) இருந்தது. இது போதுமானதாக இல்லை என்பதால் கூடுதலாகக் கேந்திரிய பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்தக் கல்வியாண்டில் 4 புதிய கேந்திரிய பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி மதுரை மாவட்டம் இடையபட்டியில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க அரசு முடிவெடுத்தது. ஆனால், அந்தப் பணிகள் இழுத்துக்கொண்டே சென்றன. காரணம், தற்போது அங்கே மெட்ரிக் பள்ளி செயல்படும் இடத்தை உள்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றித் தரும் வேலைகள் பல சிக்கல்களால் தடைபட்டு நின்றன. இந்நிலையில், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் முயற்சியால், அந்தத் தடை நீங்கியிருக்கிறது.

இந்தோ திபெத் எல்லைக் காவல் படைக்குச் சொந்தமான அந்த இடம், பள்ளிக்கென முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுநாள் வரையில் அங்கே மெட்ரிக் பள்ளியாக நடந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பிள்ளைகளுக்கான பள்ளி, கேந்திரிய பள்ளியாக இவ்வாண்டே மாறியிருக்கிறது. இதனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, "இடையபட்டி இந்தோ திபெத் எல்லைக் காவல்படை முகாமில் கேந்திரிய பள்ளி தொடங்க முன்பே அனுமதி வழங்கப்பட்டாலும்கூட, அது நடைமுறைக்கு வராமல் காலதாமதமாகிக் கொண்டே இருந்தது. நில ஒப்படைப்புப் பிரச்சினை இருப்பதை அறிந்து, மக்களவை உறுப்பினர் மற்றும் மனிதவள மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் அதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு உள்துறையிடம் நேரடியாகவும், எழுத்துபூர்வமாகவும் வலியுறுத்தி வந்தேன். தற்போது பள்ளிக்கான இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் காலதாமதப்படுத்தாமல், இந்த ஆண்டே புதிய மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன்.

தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகளில் பலர், மதுரை மாநகருக்குள் உள்ள கேந்திரிய பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த கரோனா தொற்று காலத்தில் இவ்வளவு தூரம் வந்து அவர்கள் படிப்பதைவிட, அந்த வளாகத்திலேயே படிப்பது வசதியாகவும், பாதுகாப்பாகவும் அமையும். எனவே, உடனடியாக அங்கே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்கும், கேந்திரியா வித்யாலயா ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x