Last Updated : 25 Jul, 2020 03:28 PM

 

Published : 25 Jul 2020 03:28 PM
Last Updated : 25 Jul 2020 03:28 PM

முதியோர்களின் செலவுக்கு வழிவகை செய்யும் மரங்களின் விதைகள்

அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் சேகரித்த வேப்பங்கொட்டையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மூதாட்டி.

அரியலூர்

வேலைக்குச் செல்ல இயலாமல் வீட்டில் இருக்கும் ஏழை முதியோர்களுக்கு சில மரங்கள் விதைகள் உதவுகிறது. அந்த வகையில் தற்போது, முதியோர்கள் தங்களது செலவுக்காக வேப்பங்கொட்டை சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது முதிர்ந்தோர் வேலைக்குச் செல்ல முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இவர்களுக்கு உறுதுணையாக 100 நாள் வேலை திட்டம் இருந்தாலும், வருடம் முழுவதும் இதில் வேலை வழங்கப்படுவதில்லை. தற்போது கரோனா வைரஸ் காரணமாக 100 நாள் வேலை திட்டமும் சரிவர நடைபெறவில்லை. இதனால், செலவுக்குப் பணம் கிடைக்காமல் பலரும் தடுமாறும் நிலையை காண முடிகிறது.

இந்நிலையில் தற்போது வேப்பங்கொட்டை சீசன் தொடங்கியுள்ளதால், பல கிராமங்கள் அன்றி நகர்ப்புறங்களிலும் வேப்பங்கொட்டை சேரிக்கும் வேலையில் முதியோர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சேகரிக்கும் வேப்பங்கொட்டை, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு தயாரிக்க பயன்படுகிறது. இதனால், கோயில் வளாகம், பள்ளிக்கூட வளாகம், ஏரி, குளம், ஆறு போன்றவற்றின் கரைகளில் உள்ள வேப்ப மரங்களின் கீழ் இந்த முதியோர்களை தற்போது காண முடிகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 7 கிலோ வரை வேப்பங்கொட்டை சேகரிக்கும் சிலரும் உள்ளனர். இதனால், வேப்பமரத்தின் அடியில் சில நாட்களுக்கு முன்பே தூய்மை செய்து வைத்துவிடும் முதியோர்கள், தினமும் காலையில் அங்கு சென்று கொட்டிக்கிடக்கும் பழங்களை சேகரித்து கடைகளில் விற்று தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்கின்றனர்.

வேப்பங்கொட்டையை பொருத்தவரை தோலுடன் கிலோ ரு.20 வரையிலும், தோல் நீக்கப்பட்டது கிலோ ரூ.40 வரையிலும் பழைய இரும்பு கடைகளிலும், எண்ணெய் அரவை ஆலைகளிலும் வாங்கப்படுகின்றன.

வேப்பங்கொட்டை புண்ணாக்கு விவசாய பயிர்களுக்கு முக்கிய மருந்தாக கருதப்படுவதால், இதனை தங்களது வயல்களுக்காகவும் முதியோர்கள் சிலர் சேமிப்பதையும் இங்கு காண முடிகிறது. இந்த விதைகள் சேகரிப்பில் வேலையில்லாத பெண்களும், விடுமுறை நாட்களில் சிறுவர்களும் ஈடுபடுவதை காண முடிகிறது.

இதேபோல், கடந்த மாதம் வரை புளியங்கொட்டைகளை சிலர் வீடு வீடாக சென்று சேகரித்தைக் காண முடிந்தது. அதேபால், ஆடி 20 தேதிக்கு மேல் இலுப்பை விதைகளை சேரிக்கும் முதியோர்களையும் காண முடியும். இந்த இழுப்பை விதைகள் எண்ணெய்க்காக சேகரிக்கப்படுகின்றன.

அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வேப்பங்கொட்டை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மூதாட்டிகள்.

இதுகுறித்து முதியோர்கள் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வேப்பங்கொட்டை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். என்னால் நீண்ட நேரம் வயலில் வேலை பார்க்க முடியாது. வீட்டில் உட்கார்ந்து இருந்தாலும் செலவுக்கு என்ன செய்ய முடியும்?

அதனால், வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கடையில் விற்கிறேன். காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை சேகரித்தால் அதிகபட்சம் 5, 6 கிலோ சேகரித்து விடுவேன். இது எனது செலவுக்கும், வீட்டில் காய்கறி செலவுக்கும் உதவும்" என்றனர்.

மழை மட்டுமன்றி ஏழைகளுக்கும் இதுபோல் மறைமுகமாக வாழ்வழித்து வரும் வேம்பு, புங்கன், இலுப்பை, பனை, புளியம் போன்ற மரக்கன்றுகளை நடுவோம் இயற்கையை பாதுகாப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x