Last Updated : 25 Jul, 2020 03:16 PM

 

Published : 25 Jul 2020 03:16 PM
Last Updated : 25 Jul 2020 03:16 PM

பூப்பறிக்க ஆளில்லை; பறித்தாலும் கூலி கொடுக்கவே விலையில்லை!- அரசு நிவாரணத்தை எதிர்நோக்கும் மல்லிகை விவசாயிகள்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயத்தில் மலர் சாகுபடிக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்தாண்டு மலர்கள் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், பொது முடக்கத்தால் பூக்களின் பயன்பாடும், விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இதனால் மொத்தப் பாதிப்பும் இப்போது விவசாயிகளின் தலையில் விழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் அதிகளவில் மல்லிகை சாகுபடி நடைபெறுகிறது. இதில் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலம்பட்டியில் உள்ள பல தோட்டங்களில் மல்லிகைப் பூக்கள் பறிக்க ஆளில்லாமல், மலர்ந்து கிடக்கின்றன. சிலர் கூலிக்கு ஆட்களை அமர்த்தினால் கட்டுபடியாகாது என்று, தங்கள் குடும்பத்தினர், உறவினர் வீட்டுச் சிறுவர்களை அழைத்து வந்து பூப் பறிக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய நக்கலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம், “கோடைக் காலமான ஏப்ரல் முதல் ஜூலை வரையில்தான் மல்லிகைப்பூ சீசன். எனவே, நல்ல பாசன வசதியில்லாத இடங்களில் மல்லிகை பயிரிட்டால் பயனிருக்காது. எங்கள் ஊரில் நிலத்தடி நீர் இருப்பதால், பிரச்சினையில்லாமல் இருந்தது. கடந்த மாதம் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு, எங்கே விலைக்குத் தண்ணீர் வாங்க வேண்டியது வந்துவிடுமோ என்று பயந்தபோது, மழை வந்து காப்பாற்றியது. அதனால், கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல். ஆனால், விலையே இல்லை.

பொதுவாக மல்லிகைப் பூ வரத்து அதிகரிக்கும்போது, விலை குறைவது வழக்கம்தான். ஆனால், இந்தாண்டு பொது முடக்கம் காரணமாக பூக்களின் தேவையும், பயன்பாடும் ரொம்பவே குறைந்து விட்டது. கல்யாணம், காய்ச்சி, திருவிழா, நல்லது கெட்டது எதுக்குமே மக்கள் கூட முடியவில்லை என்பதால் பூ விற்பனை குறைந்து, பூ மார்க்கெட் காற்றாட ஆரம்பித்து விட்டது. மதுரை, திண்டுக்கல், ஆண்டிபட்டி பூ மார்க்கெட்களில் வெளியூர் வியாபாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. இது சீசன் முடிகிற காலம்.

முன்பெல்லாம், கிலோ ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையில் விலை போனதுண்டு. இப்போது மதுரை மார்க்கெட்டிலேயே கிலோ 160 ரூபாய்க்குத்தான் எடுக்கிறார்கள். அதுவும் காலை 10 மணிக்குள் கொண்டு போனால்தான். அதற்குப் பிறகு போனால், சென்ட் கம்பெனிக் காரர்களிடம்தான் விற்க முடியும். அவர்கள் வெறும் 60 முதல் 80 ரூபாய்தான் தருகிறார்கள். பஸ் ஓடாததால், பைக்கில் செல்ல பெட்ரோலுக்கே 300 ரூபாய் செலவாகிறது" என்றார் வருத்தமாக.

விவசாயி செல்வம்

அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பாண்டியம்மாள் கூறுகையில், "5 மணிக்குப் பூவெடுக்க ஆரம்பித்தால், 8 மணிக்குள் பறித்துவிடலாம். அப்படியே பஸ் பிடித்து மதுரையில் 10 மணிக்குள் பூவை விற்றுவிடலாம். ஆனால், அதற்கு 10 ஆளைக் கூலிக்கு அமர்த்த வேண்டும். தலைக்கு 100 ரூபாய் சம்பளம். இப்போதுள்ள விலைக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்பதால், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும் வைத்துத்தான் பூ பறிக்கிறோம். அவர்கள் பொழுது விடிந்த பிறகுதான் பூவெடுக்க ஆரம்பிப்பார்கள்.

அந்தா இந்தா என்று பூவெடுத்து முடிக்கவே 11 மணியாகிவிடும். அதன் பிறகு கொண்டுபோனால் நல்ல விலையும் கிடைப்பதில்லை. உரம், பூச்சி மருந்து, களை, பூவெடுக்கும் கூலி எல்லாம் சேர்த்தால், நஷ்டம்தான் வரும். எனவே, நிறைய பேர் தோட்டத்தை அப்படியே விட்டுவிட்டார்கள். மல்லிகைப்பூ என்றில்லை, ரோஜா, கனகாம்பரம், சம்பங்கி, முல்லை என எல்லாப் பூக்களின் நிலைமையும் இதுதான். அரசாங்கம் எங்களுக்கும் ஏதாவது நிவாரணம் வழங்கினால் பெரிய உதவியாக இருக்கும்" என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x