

பெட்ரோல் டீசல் விலைகளை நாளுக்கு நாள் பெட்ரோல் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன, இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
டீசல் விலை இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.79.07 ஆக உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலர் ஜேசுராஜா மற்றும் அமைப்பாளர்கள் உட்பட பல மீனவர்கள் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
“பெட்ரோல் டீசல் விலைகள் தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டீசல் விலை உயர்வினால் எங்களால் சமாளிக்க முடியவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு ஆகும் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன, இதனால் அனைத்து வகையான மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ராமேஸ்வர மீனவர் சங்க தலைவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினர், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து டீசல் பில்களுடன் அல்வாவையும் சேர்த்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யாஷ் யுவராஜ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.