Published : 25 Jul 2020 12:59 PM
Last Updated : 25 Jul 2020 12:59 PM

கரோனா அச்சம்; கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிப்பு; நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்க; கே.எஸ்.அழகிரி

நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்த வேண்டுமென்பதில் மத்திய அரசு மிகுந்த முனைப்புக் காட்டி வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் 10 மற்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில், எந்த தேர்வுகளும் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் தான், மே 3 ஆம் தேதி மற்றும் ஜுலை 26 ஆம் தேதி என இரு முறை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேதியில் நடத்த முடியாத நிலையில் தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப் போவதாக தேசிய தேர்வாணையம் ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

நீட் தேர்வுகள் தனிமனித இடைவெளியுடன் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது. ஆனால், கரோனா தொற்று காரணமாக நீட் தேர்வில் பங்கெடுக்க மாணவர்களும், பெற்றோர்களும் பெருமளவில் விரும்பவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை 10, 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்வு பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதை தவிர கல்லூரிக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தேர்வு நடத்த முடியாத நிலையில் நீட் தேர்வை எப்படி நடத்த முடியும்?

நீட் தேர்வு தயாரிப்புக்காக அதிக பணத்தை செலவழித்து பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து வசதி உள்ளவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழக அரசு கடந்தாண்டு 412 பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தியது. அந்த வகுப்பில் பயிற்சி பெற்ற ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள் 450 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றிருந்ததால் அவர்களில் ஒரு மாணவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதை விட தமிழகத்திற்கு வேறு ஓர் அவலம் இருக்க முடியாது.

மேலும், நடப்பாண்டில் இதுவரை பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தவில்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்?

மாவட்டத்திற்கு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதாக, தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. மேலும், அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்திருக்கிறது. நீட் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளே நடத்தாத நிலையில், இவற்றால் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 997. ஆனால், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 ஆக குறைந்துள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை தமிழக மாணவர்கள் இழந்து வருவதுதான் இந்த எண்ணிக்கை குறைவுக்குக் காரணம். தேசிய அளவில் நீட் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருகிறது. ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், நடப்பாண்டில் 12 ஆம் வகுப்பில் ஏறத்தாழ 10 லட்சம் மாணவர்கள் தேர்வு பெற்றிருக்கின்றனர். ஆனால், நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் படித்த 7,500 பேர் தான் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் நீட் தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது? எதற்காக நடத்தப்படுகிறது?

தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை இதுவாகத்தான் இருக்க முடியும்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 2017 செப்டம்பர் 18 அன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவை திருப்பி அனுப்பும் போது, அதற்கான காரணத்தை இன்றைய தேதி வரை தமிழக அரசுக்குக் குடியரசுத் தலைவர் தெரிவிக்கவில்லை.

எனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்ட வடிவம் பெறுவதற்கு உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசால் தடுக்க முடியவில்லை எனில், நீட் தேர்வை தடுக்க எத்தகைய போராட்ட வழி முறைகளை கையாள்வது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x