

கரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் இருவர், தனியார் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 12 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலை காவலர் ஆகிய இருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் (ஜூலை 22) கரூர் நகர போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், நேற்று முன்தினம் (ஜூலை 23) அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் காவலர்கள் 30 பேருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், இன்று (ஜூலை 25) வெளியான முடிவில் மேலும் ஒரு போக்குவரத்துக் காவலருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும், பெண் காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெங்கமேட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவர், காந்திகிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர், தோகைமலையைச் சேர்ந்த டிபன் ஸ்டால் உரிமையாளர் உள்ளிட்ட 12 பேருக்கு இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.