Last Updated : 25 Jul, 2020 08:05 AM

 

Published : 25 Jul 2020 08:05 AM
Last Updated : 25 Jul 2020 08:05 AM

வாகனத்தின் புகைப்படத்தை நேரடியாக பதிவு செய்தால் மட்டுமே தகுதிச் சான்று: பிரத்தியேக செயலி அறிமுகம்

பேருந்து, கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை இயக்க வாகன தகுதிச் சான்று (எஃப்.சி.) பெறுவது அவசியம். இதற்காக வாகனங்களை நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று, சான்று பெற வேண்டும். சான்று அளிக்கும் முன்பாக வாகனம் இயக்கும் நிலையில் உள்ளதா, அவசர காலத்தில் வெளியேறும் வழி, பிரேக், முக்கிய பாகங்கள் சரியாக உள்ளதா என்பதை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள். தகுதிச் சான்று காலாவதிக்குப் பின்னர், உரிமையாளர்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

ஆனால், வாகனங்களை நேரடியாக எடுத்து வந்து காண்பிக்காமலேயே சில இடங்களில் சான்று வழங்கப்படுவதாகவும், இதனால் நல்ல நிலையில் இல்லாத வாகனங்களுக்குகூட சான்று கிடைத்துவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தவிர்க்கும் நோக்கில், வாகன தகுதிச் சான்று வழங்குவதற்கென்றே பிரத்தியேக செயலி (Vahan FC App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதிச் சான்று

இதுதொடர்பாக கோவை (மைய) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறியதாவது:

புதிய நடைமுறைப்படி வாகனத்தின் முன், பின் பக்கங்கள், இடது, வலது பக்கங்கள், முழு வாகனத்தின் புகைப்படம் என மொத்தம் 5 புகைப்படங்களை வாகன ஆய்வாளர்கள் எடுக்க வேண்டும். இதற்காக அலுவலர்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) அளிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரத்தியேக செயலியில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர், வாகனத்தை இயக்கி பரிசோதித்து, ஆவணங்களை சரிபார்த்த பிறகு தகுதிச் சான்று வழங்கப்படும்.

வாகனத்தை நேரடியாக பார்த்து புகைப்படம் எடுக்காமல் இனி சான்று அளிக்க முடியாது. இதன்மூலமாக வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், விரைவாகவும் சான்று வழங்கப்படுகிறது.

மேலும், வழக்கமாக வாகனம் எங்கு ஆய்வு செய்யப்படுகிறதோ, அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்தான் வாகன ஆய்வாளர்கள் செயலியில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முடியும். தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x