

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு உடல்நலத்துடன் பழைய நிலைக்கு திரும்புவதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் அவர் சிகிச்சை மேற்கொண்டார். அதேநேரத்தில் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அரசியல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
தொடர் மருத்துவ சிகிச்சைகளால் அவர் முன்பைவிட தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உற்சாகம் அடைந்துள்ள தேமுதிகவினர், ஆகஸ்ட் 25-ம் தேதி அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘விஜயகாந்த் முன்பைவிட தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கம்பீரமான பேச்சை விரைவில் கேட்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் விஜயகாந்த் பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவோம். இந்த ஆண்டும் அவரது பிறந்த நாளை ஆகஸ்ட் 25-ம் தேதி சிறப்பாக கொண்டாடுவதற்கான பணியை தொடங்கியுள்ளோம். இருப்பினும், கரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருவதால், கட்சித் தலைமை அறிவிக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’’ என்றனர்.