

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ரூ.1.80 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்பெஞ்சமின் தெரிவித்ததாவது: கரோனா தொற்று பேரிடர்காலத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அனைத்து வங்கி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக, தமிழகத்தில் 3,53,085 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7,043 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 20 சதவீதம் கடன் உதவிகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.