

ஆந்திர தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் சென்றுவர மாதாந்திர இ-பாஸை வழங்க தமிழக தொழில் துறைக்கு அரசு அனுமதியளித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். தற்போதுஊரடங்கு காரணமாக தமிழகத்தில்இருந்து இதர மாநிலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம்பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் ஆந்திராவில் தொழிற்சாலையை அமைத்துள்ள ஜப்பான் நிறுவனங்கள் மற்றும் ஜப்பான் தூதரகம் சார்பில், தினசரி தொழிலாளர்களை அழைத்துச் செல்ல தமிழக தொழில்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
இதுதவிர, ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி உள்ளிட்ட இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் இருந்து பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கான அனுமதி கோரி பல நிறுவனங்கள் தமிழக தொழில்துறையை நாடின.
இவற்றை பரிசீலித்த தொழில்துறை, ஒரு மாதம் செல்லத்தக்க இ-பாஸ்களை நிறுவனத்தின் பெயரில் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
மேலும், பணியாளர்களை அழைத்துச் செல்லவும், திரும்ப கொண்டுவந்து விடவும் தொழிற்சாலையே போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இ-பாஸ்களை கண்காணிப்பதற்கு தொழிற்துறைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் தொழில்துறை சார்பில்அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து தலைமைச்செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், ‘‘தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான மாதாந்திர இ-பாஸ்களை, பணியாளர்களுக்காக நிறுவனமே விண்ணப்பிக்கும் நிலையில், தமிழக தொழில்துறை வழங்கலாம். அதை நிறுவனமே புதுப்பிக்க வேண்டும்.
மேலும், தொழில் நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு சென்றுவர அந்தந்த தொழிற்சாலை உள்ள மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.