கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.76.50 கோடி நிதி ஒதுக்கீடு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.76.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்கு ரூ.75.28கோடி நிதியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிக்களுக்காக கூடுதலாக ரூ.76.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதி மூலம் பொது சுகாதாரத் துறையால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தால் தமிழகம் முழுவதும் வட்டம், வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனை கட்டிடங்கள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பு நிறுவப்படும். ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்படும்.
இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவுக்கு கரோனா பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி உயிர்கள் காக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
