

கந்த சஷ்டி கவசம் குறித்துஅவதூறு வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட யூ-டியூப் சேனல் நிர்வாகிக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங் கப்பட்டுள்ளது.
யூ-டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் பற்றியும், புராணங்கள் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசனை (49) கைது செய்தனர்.
இதையடுத்து அவதூறு வீடியோவின் தொகுப்பாளர் சுரேந்திரன் (36), ஓட்டேரி சோமசுந்தரம், மறைமலை நகர் குகன் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சைபர் கிரைம் போலீஸார் மனு
இதையடுத்து சுரேந்திரன், செந்தில்வாசனை தங்கள் காவலில் விசாரிக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை, செந்தில்வாசனை மட்டும் வரும் 27-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதியளித்தார்.