

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயாரை கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், அதனை கண்டித்து இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் தனிப்படை போலீஸார் சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவவீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா (30), தாயார் ராஜகுமாரி (61) ஆகிய இருவரை ஜூலை 14-ம் தேதி அதிகாலை கொன்றுவிட்டு75 பவுன் நகைகளை சிலர் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் இந்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதுவரை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கொலையை கண்டித்தும், கொலை செய்தோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தேவகோட்டை ராம்நகரில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் ஸ்டீபனின் மனைவி சினேகா சென்னை மகாகவி பாரதி நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கரோனா தொற்று பரவிய சமயத்தில் பெற்றோருடன் அவர்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கோட்டையூருக்கு வந்துள்ளார். அதன்பிறகே சினேகா கணவரின் ஊரான முடுக்கூரணிக்கு வந்துள்ளார்.
இதனால் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.