

கரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன் ரயில் நிலையத்தில் யாசகம் செய்துவந்த இளைஞர் ஊரடங்கு ஆரம்பித்த சில நாட்களிலேயே யாசகம் செய்த பணத்தைக் கொண்டு டீ விற்கும் தொழிலாளியாக மாறியதோடு இன்று தினமும் 20 பேருக்கு உணவளிக்கும் கதை தான் இது.
இளைஞரின் பெயர் தமிழரசன். வயது 22. வளர்ந்தது அருப்புக்கோட்டையில் ஓர் ஆதரவற்றோர் இல்லம். படிப்பு பிஎஸ்சி கணினி அறிவியல்.
பட்டம் பயின்றதும் வேலை கனவோடு சென்னை சென்றுள்ளார். ஆனால் காலம் அவருக்கு படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தரவில்லை. சென்னையில் வேலைக்காக சுற்றித் திரிந்தவர் மதுரைக்கு வந்து சேர்ந்த நேரம் கரோனாவால் ஊரடங்கியது.
ஆனால் அதன் பின்னர்தான் அவர் வாழ்வில் மாற்றம் பிறந்துள்ளது. படித்தும் வேலை கிடைக்காததால் ஊர் ஊராக யாகசம் செய்த அந்த இளைஞர், தற்போது சொந்தமாக சைக்கிளில் டீ விற்கும் தொழில் செய்கிறார். அதில் கிடைக்கும் வருவாயில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 20 பேருக்கு தினமும் அவரே சமைத்து இலவசமாக சாப்பாடும் வழங்கி வருகிறார். கடந்த 2 மாதமாக தினமும் இவர் இந்த சேவையை செய்கிறார்.
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் சைக்கிளில் டீ விற்கிறார்.
அதே இளைஞர், காலை, மதியம், இரவு வேளைகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்று இலவசமாக உணவு வழங்குகிறார்.
கிடைக்கும் வருமானத்தை சுயநலமாக சேமிப்போருக்கு மத்தியில் சைக்கிள் டீ விற்கும் இளைஞரின் இந்த சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் பேசினோம்.
பாதையும், பயணமும்..
‘‘என் பெயர் தமிழரசன். 22 வயது ஆகிறது. அலங்காநல்லூர் அருகே கல்லனை கிராமத்தில் வசிக்கிறேன். சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துவிட்டேன்.
தூத்துக்குடி தான் எனது சொந்த மாட்டம் என்று நான் வளர்ந்த அருப்புக்கோட்டை ஆதரவற்ற இல்லத்தினர் கூறிதான் தெரியும். அவர்கள் பராமரிப்பிலேயே திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் வரை படித்தேன். எல்லோரையும் போல நானும் பெரிய வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்குச் சென்றேன். ஆனால். சென்னை என்னை அன்புடன் வரவேற்கவில்லை.
பகலில் வேலை தேடுவது, இரவில் மெரினா பீச்சில் தூங்குவதுமாக நாட்கள் சென்றன. வேலை கிடைக்கும் வரை சாப்பாட்டுக்காக ஓட்டலில் வேலை பார்க்கலாம் என்று சென்றால் அதற்கும் குடும்பப் பின்னணியைக் கேட்டு நிராகரித்தார்கள்.
வழக்கம்போல் மெரினா பீச்சில் தூங்கும்போது என்னுடைய பையை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள். உடைமைகளோடு என்னுடைய கல்விச் சான்றுகளும் பறிபோனது. வேலை தேடுவதற்காக இருந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. கண் கலங்கி நின்றேன். போலீஸில் புகார் செய்து எப்ஐஆர் போட்டல்தான் மறுபடியும் சான்றிதழ்களை வாங்க முடியும். அது உடனடியாக நடக்கிற காரியம் இல்லை என்பதால் பசிக்காக சென்னையில் பல இடங்களில் யாகசம் செய்ய ஆரம்பித்தேன். கரோனா ஊரடங்கிற்கு 1 மாதத்திற்கு முன் மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கிறேன்.
ரயில் நிலையத்திலேயே கிடைக்கிற இடத்தில் தூங்கி அங்கு வருவோர் கொடுக்கிறதை சாப்பிட ஆரம்பித்தேன். கரோனா ஊரடங்கு ஆரம்பித்ததும் போலீஸார் இங்கெல்லாம் படுக்கக்கூடாது என்று விரட்டினார்கள். வழிப்போக்கனாக மதுரையில் ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தேன். அப்படித்தான் அலங்காநல்லூர் வந்தேன். இங்கும் சாப்பாட்டிற்காக பொதுஇடங்களில் யாகசம் செய்தேன். நான் யாசகம் செய்து சேர்த்துவைத்ததில் ரூ.7 ஆயிரம் கிடைத்தது.
இனி யாகசம் செய்யக்கூடாது, நாம் மற்றவர்களுக்கு கொடுக்கிற இடத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன். வாடகை சைக்கிள் எடுத்து ரூ.2 ஆயிரம் முதலீட்டில் டீ விற்கும் தொழிலைத் தொடங்கினேன்.
தினமும் ரூபாய் 1,500 வரை வருமானம் கிடைக்கிறது. ஆரம்ப நாட்களில் சைக்கிளில் டீ விற்கச் செல்லும்போது சாலையோரம் பசியால் வாடுவோரைப் பார்த்து நாமும் இப்படித்தானே படுக்க இடமில்லாமல் சாப்பிட எதுவும் இல்லாமல் தவித்தோம் என்று அவர்களுக்கு சாப்பிட காசு கொடுப்பேன். பின்னர் நான் சாப்பிடுவதற்காக சமைக்கும்போது கூடுதலாக சமைத்து அதை அவர்களுக்கு கொண்டு போய் கொடுக்க ஆரம்பித்தேன்.
காலையில் சமைத்து கொண்டுபோய் கொடுப்பேன். பிறகு டீ விற்கப் போய்விடுவேன். மதியம் சமைத்துக் கொண்டு போய் கொடுப்பேன். பிறகு டீ விற்கச் செல்வேன். இரவும் சமைத்துக் கொடுப்பேன். தினமும் 20 பேருக்கு ஒரு வேளை சாப்பாடாவது கொடுத்துவிடுவேன்.
இப்போது நான் மனநிறைவாக வாழ்கிறேன். மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழ்கிறேன், ’’ என்றார் பெருமிதமாக.