Published : 24 Jul 2020 06:25 PM
Last Updated : 24 Jul 2020 06:25 PM

நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அவசியம்: கி.வீரமணி வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அவசியத் தேவை என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கை:

"மக்களாட்சி - ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகள் 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவத்தின் செயல்பாடாகவே அமைதல் வேண்டும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பலமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, 'அதிகாரம் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.'

அவ்வகையில் மிக முக்கியமான அமைப்பாக ஆட்சியின் மூன்று அங்கங்களில் ஒன்றாக நீதிமன்றங்களும் உள்ளன.

சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது

அவற்றில் நாட்டின் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அமைப்புகளில் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சமூக நீதிக்கே அரசமைப்புச் சட்டம் முதலிடமும், முன்னுரிமையும் தந்துள்ளது.

நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் பற்றிய வழக்குகளில் சரியான பார்வையோடு தீர்ப்பு வழங்கிட வேண்டிய மிக முக்கியப் பொறுப்பான அமைப்புகளாக உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உள்ளன.

அதோடு, தேவைப்படின் முக்கிய ஆலோசனைகளை அரசுக்குத் தரும் உயர்ந்த இடத்திலும் உச்ச நீதிமன்றம் உள்ளது.

இந்நிலையில், சமூக நீதி உணர்வுக்கு உண்மையான செயல்வடிவம் நீதித்துறையிலும் கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமே உண்மையான அதிகாரப் பரவல் நிறைந்த ஜனநாயகக் குடியரசாக ஓர் ஆட்சி அமைய முடியும்.

பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை

நாட்டின் உயர் நீதிமன்றங்கள் பலவற்றிலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களைச் சார்ந்த நீதிபதிகளை பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் காண்பது மிகவும் அரிதினும் அரிதாகவே இன்று இருக்கிற கொடுமைக்குப் பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

பல உயர் நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் நீதிபதிகளாக இல்லை. அது மட்டுமல்ல, பெண்கள் நீதிபதிகளாக வந்தால்கூட அவர்கள் முன்னேறிய, உயர் சமூகப் பெண்களாகவேதான் இருக்கிறார்கள் என்பதே யதார்த்த நடைமுறை!

உச்ச நீதிமன்றத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதியாக வந்து, 'கொலீஜியம்' என்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவான ஐவரில் ஒருவர் என்ற அளவுக்கு உயர்ந்தவர் நீதிபதி ஆர்.பானுமதி!

வரலாற்றுச் சாதனை படைத்த பெருமைக்குரியவர்

நீதித்துறையில் அவர் நுழைந்த பிறகு, மாவட்டங்களிலும் சரி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்த நிலையிலும், 'ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து' நீதி வழங்குவதில் அவர் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்த பெருமைக்குரியவர் ஆவார்!

எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும்கூட, அதில் சென்று கலந்து கொள்ளாமல், தனது நீதித்துறைப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தித் தனி முத்திரை பதித்தவர்.

அவர் பதவிக் காலத்தில் வழங்கிய பல தீர்ப்புகள் சமூகக் கண்ணோட்டமும், சட்ட இணைப்பும் சரியாக இணைந்து வழங்கப்பட்ட சரித்திரப் புகழ்வாய்ந்த தீர்ப்புகளே! அவர் பதவிப் பொறுப்புகளில் இருந்தபோது, எதிர்நீச்சலுடன்தான் ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, உச்ச நீதிமன்ற நீதிபதியாகி 'தன் கடன் பணி செய்வதே' என்ற தத்துவத்தின் உருவமாகக் கடமையாற்றி உயர்ந்துள்ளார்!

சமூக நீதிக்குரிய அடையாளமாக...

அவர் ஓய்வு பெற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நீதிபதியாக, சமூக நீதிக்குரிய அடையாளமாக. ஒரே ஒருவர் தவிர, பிற்படுத்தப்பட்டவர் அங்கு நீதிபதியாக இல்லை என்ற நிலைதான் உள்ளது!

எஸ்.சி., சமூகத்தினைச் சார்ந்த நீதிபதி பல ஆண்டுகாலமாய் இல்லாமல் இருந்து, சில மாதங்களுக்குமுன் மும்பையைச் சேர்ந்த ஒருவர் நியமனமாகி கடமையாற்றுகிறார்!

அதுபோல, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர்; முஸ்லிம் ஒருவர் என்ற அளவில்தான் சமூக அதிகாரப் பகிர்வு தத்துவம் அங்கே இருக்கும் நிலை உள்ளது!

எஞ்சிய 27 நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் உயர் சமூக, முன்னேறிய வகுப்பினர்தான் என்ற நிலைதான் உள்ளது!

முன்னாள் தலைமை நீதிபதியின் கருத்து!

முன்னாள் தலைமை நீதிபதியான கஜேந்திர கட்கர் ஒருமுறை கூறினார்:

'நீதிபதிகளும், வகுப்பு உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூக அமைப்பின் காரணமாக அப்படிப்பட்ட நிலை இருக்கவே செய்கிறது' என்றார்.

உச்ச நீதிமன்றம்தான் ஜனநாயகத்தினைக் காக்கும் பலமான பாதுகாப்பு அரண். மக்களின் கடைசி நம்பிக்கை. அங்கே சமூக நீதிக் கொடி தலைதாழாமல் பறக்க வேண்டாமா? சமூக நீதிப்படி அதிகாரப் பகிர்வு, அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படவேண்டாமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை ஒலிக்கத் தவறக்கூடாது!

இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றக் குழுக்களும், அவர்களின் உரிமைப் பாதுகாப்புக்கான தேசியக் கமிஷன்களும் முழு கவனம் செலுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அங்கே ஒலிக்கத் தவறக்கூடாது!

அத்திபூத்ததுபோல் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவர்கள் எண்ணிக்கை இப்படி குறைந்துவிட்ட நிலைதான் இப்போது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அனுபவமும், பணிமூப்பும் இருந்தும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மூத்த தலைமை நீதிபதி போன்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், இப்போதாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், நியாயம் கிடைக்க வேண்டி செய்வது, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிக முக்கியம்!

மேலும், தகுதியுள்ளவர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை சமூகத்தையும் சேர்ந்த நீதிபதிகளை மேலும் நியமித்து, உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இது பெரும்பாலான மக்களின் நியாயமான கோரிக்கையாகும்!

கடமையை மறக்க வேண்டாம்!

சமூக நீதிக்கான இந்தக் குரலை அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் குரல் கொடுக்க ஆயத்தமாக வேண்டிய முக்கிய தருணம் இது. கடமையைத் துறக்க வேண்டாம்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x