Published : 24 Jul 2020 05:53 PM
Last Updated : 24 Jul 2020 05:53 PM

கரோனா காலத்தில் கறிவேப்பிலைக்கும் விலையில்லை!- கலங்கி நிற்கும் கோவை விவசாயிகள்

கோவை

தேவைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படும் விஷயத்தை ‘கறிவேப்பிலை மாதிரி’ என்று சொல்வார்கள். கரோனா காலத்தில் கறிவேப்பிலையின் நிலையே அப்படித்தான் ஆகும் போலிருக்கிறது. ஒரு கிலோ ரூ.30, ரூ.40 என விலை போக வேண்டிய கறிவேப்பிலை ரூ.10-ஐத் தாண்டுவதில்லை என்று வருந்துகிறார்கள் காரமடை விவசாயிகள்.

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்திற்குள் உள்ள பெல்லாதி, சிக்காராம்பாளையம், மருதூர் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் கறிவேப்பிலை விவசாயம் செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் கரும்பு, வாழை என்று பயிரிட்டு வந்த இப்பகுதி விவசாயிகள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய வறட்சியின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். கறிவேப்பிலை பயிரிட்ட ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டுமே அந்த வறட்சியைச் சமாளித்தார்கள். எப்படிப்பட்ட வறட்சியையும் கறிவேப்பிலை தாங்கும் என்பதை உணர்ந்த மற்ற விவசாயிகளும் அதன்பிறகு கறிவேப்பிலை விவசாயத்திற்கு மாறினர்.

திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை, திருச்சி, கரூர் தொடங்கி, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், கோழிக்கோடு வரை பல்வேறு நகரங்களிலிருந்தும் இந்தப் பகுதிக்கு வந்து கறிவேப்பிலையை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள். நல்ல விலையும் கிடைத்து வந்தது. ஆனால், கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பின்னர் கடந்த 4 மாதங்களாகக் கறிவேப்பிலை விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளம், கர்நாடக மாநிலங்களுக்குக் கறிவேப்பிலை கொண்டு செல்லப்படுவதில்லை. உள்ளூர் வியாபாரத்தை மட்டும் நம்ப வேண்டியிருக்கிறது. தமிழக நகரங்களுக்கு பஸ்ஸிலேயே ஏற்றிக் கொண்டு செல்வார்கள். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. அதனால் இப்போது பல நிலங்களில் கறிவேப்பிலை கொழுந்துகள் பறிப்பதையே நிறுத்திவிட்டனர் விவசாயிகள்.

இதுகுறித்துக் காரமடை, புங்கம்பாளையம் கறிவேப்பிலை விவசாயி வெள்ளியங்கிரியிடம் பேசினோம்.

“கறிவேப்பிலை முதல் நாற்று, நட்டு 9 மாசம் கழிச்சே அறுவடைக்கு வரும். அப்பவும் பெரிசா விளைச்சல் எடுக்க முடியாது. ஏக்கரில் 5,500 நாற்று நட்டோம்னா 9 மாசம் நெருங்கும்போது சுமார் 2 டன் கறிவேப்பிலை கொழுந்து கிள்ளலாம். அப்புறம் 3 மாசம், 4 மாசத்திற்கு ஒரு தடவை 5 டன் வரைக்கும் கொழுந்து கிள்ள முடியும். நாலு போகம் எடுத்தா 20 டன் வரைகூட விளைச்சல் எடுக்கலாம். இந்தப் பயிருக்கு 15 நாளைக்கு ஒரு தடவை தண்ணீர் விட்டால் போதும். அதுவும் தண்ணி தேங்கிற அளவுக்கு விட வேண்டியதில்லை. செலவும் பெரிசா இருக்காது. 4 உழவோட்டினால் செடி நல்லா செழிச்சு வரும். ஒரு தடவை உழவோட்ட, மருந்தடிக்க ரூ. 15 ஆயிரம் வரை ஏக்கருக்குச் செலவு வரும். அதனாலதான் இங்கே எல்லோரும் கறிவேப்பிலை விவசாயத்தைப் பிரதானமா செய்யறாங்க.

என்னோட காட்டுல 4 ஏக்கர் கறிவேப்பிலைதான் இருக்கு. வழக்கமா ஒரு கிலோ ரூ.30, ரூ.40 வரை விலை போகும். ரொம்ப விலை கிடைக்காத சீஸனில் கூட கிலோ ரூ.10-க்கு மேல விலை போகும். இதுதான் 15 வருஷத்து நிலவரம். இப்ப நல்ல விலை கிடைக்கிற சீஸனிலேயே ரூ.10-க்குத்தான் விலை போகுது. இனி மழைக்காலம். செடிகள் எல்லாம் தளதளன்னு வரக்கூடிய நேரம். இதுல விலை இன்னமும் குறைஞ்சா ஆச்சரியப்படறதுக்கில்லை. கரோனா காலம் முடிஞ்சால்தான் கறிவேப்பிலைக்கும் மரியாதை கிடைக்கும் போலிருக்கிறது” என்றார் வெள்ளியங்கிரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x