

மத்திய - மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி உள்ளாட்சி நிர்வாகங்களும் கரோனா ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஊராட்சி அதில் ஒருபடி முன்னே நிற்கிறது.
கரோனா ஒழிப்பில் மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் தோவாளை ஊராட்சி தற்போது ஊராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் வீடு வீடாகச் சென்று முகக்கவசங்களை வழங்கி வருகிறது. ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே இதைத் தன்னார்வத்துடன் செய்து வருவது கூடுதல் சிறப்பு.
இதுகுறித்து தோவாளை ஊராட்சி மன்றத் தலைவர் நெடுஞ்செழியனும் துணைத் தலைவர் தாணுவும் நம்மிடம் பேசுகையில், “எங்கள் ஊராட்சிக்குள் 2 ஆயிரம் வீடுகள் இருக்கின்றன. இதுவரை அந்த வீடுகளுக்குச் சென்று 15 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கி இருக்கிறோம். எங்கள் கிராமத்தில் இதுவரை 6 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார்கள். இப்படியான சூழலில், மேலும் தொற்று பரவாமல் இருக்க மக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வீடுதோறும் முகக்கவசங்களை வழங்கும் முடிவை எடுத்தோம்.
கரோனா பொதுமுடக்கத்தால் பலர் வேலை இழந்தனர். எங்கள் ஊரின் முக்கியத் தொழிலே பூ சார்ந்ததுதான். தமிழகத்தில் பிரசித்திபெற்ற மலர்ச்சந்தை தோவாளை மலர்ச்சந்தைதான். அதுவும் கரோனாவின் தொடக்கத்தில் மூடப்பட்டிருந்தது. இதனால் பலரும் வேலை இழந்தனர். உடனே எங்கள் ஊராட்சி மன்றத்தின் சார்பில், எங்கள் ஊராட்சிக்குட்பட்டு ஏழ்மை நிலையில் இருப்போரின் பட்டியலைச் சேகரித்தோம். எங்களிடம், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பட்டியல் இருந்ததால் அது மிகவும் எளிமையாகவும் இருந்தது. பொதுமுடக்கம் அறிவித்த முதல் நாளில் இருந்து 53 நாள்களுக்கு, 340 பயனாளிகளுக்கு ஊராட்சி சார்பில் உணவு கொடுத்தோம். இதற்குப் பொதுமக்களில் சிலரும் உதவி செய்தார்கள்.
எங்கள் ஊரில் சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தபால் நிலையம் எனப் பத்துக்கும் அதிகமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கெல்லாம் மக்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள் என்பதால் இங்கெல்லாம் சானிடைசர் வசதி செய்து கொடுத்தோம். வாரம் ஒருமுறை கிருமிநாசினியும் அடிக்கிறோம். தோவாளை ஊராட்சிக்குள் கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதற்கு நாங்கள் எடுத்து வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஒரு முக்கியக் காரணம்” என்றனர்.