Last Updated : 24 Jul, 2020 04:24 PM

 

Published : 24 Jul 2020 04:24 PM
Last Updated : 24 Jul 2020 04:24 PM

மானாவாரியாக பயிரிடும் வகையில் புதிய ஐவகை வாழை அறிமுகம்: ராமநாதபுரம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

ராமநாதபுரம்

மானாவாரியாக வறட்சியைத் தாங்கி வளரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐவகை வாழை ரகங்கள் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைய உள்ளது.

தோட்டக்கலை பயிர்களில் ஒன்றான வாழை ஆழ்துளை நீர்பாசனம் உள்ள நிலங்களில் தான் விவசாயம் செய்ய முடியும். தற்போது பிளாஸ்டிக்குகளுக்கு தடை உள்ளதால் வாழை இலைக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீர் வசதியில்லாத மானாவாரி நிலங்களிலும் வாழை பயிரிடும் வகையில் திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் 2019-ம் ஆண்டு வறட்சியை தாங்கி விளையும் 5 புதிய வாழை ரகங்களை உருவாக்கியுள்ளது.

இந்த ரகங்களை வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ராமநாதபுரம் கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம் பரிசோதனை அடிப்படையில் தங்களது பண்ணையில் பயிரிட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் கடலோர உவர் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டபிள்யு.பேபி ராணி கூறியதாவது, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மானாவாரியாக பயிரிடும் வகையில் பாங்கிரியர், உதயம், கற்பூரவல்லி, சாம்பல் மொந்தன், சபா ஆகிய ஐவகை ரகங்களை கடந்தாண்டு உருவாக்கியுள்ளது.

இந்த ரகங்கள் வறட்சியைத் தாங்கியும், உவர் மண், உவர் நீரிலும் வளரக் கூடியது. இது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட வறட்சி மாவட்டங்களுக்கு உகந்தது. இந்த ரகங்களுக்கு ஆண்டிற்கு 500 முதல் 600 மி.மீட்டர் மழை பெய்தாலே போதும்.

மற்ற வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு என்றால், இந்த ரகங்களுக்கு ரூ. 10,000 மட்டுமே செலவாகும். அதேபோல் ஐவகை ரகங்களும் விவசாயிகளுக்கு செலவிலிருந்து 5 மடங்கு லாபத்தை தரும். அதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக எங்களது ஆராயச்சி மையத்தில் பரிசோதனை அடிப்டையில் பயிரிட்டோம்.

இவை நன்கு வளர்ந்துள்ளது. விவசாயிகள் விரும்பினால், அவர்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திலிருந்து கன்றுகள் வாங்கிக் கொடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த ரகங்களை பயிரிட்டு நல்ல லாபம் அடையலாம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x