

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் 7 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வட கடலோர தமிழகம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:
வேடசந்தூர் (திண்டுக்கல்), வேடசந்தூர் புகையிலை அலுவலகம் (திண்டுக்கல்) தலா 15 செ.மீ., சோலையார் (கோவை), அம்முண்டி (வேலூர்) தலா 15 செ.மீ., திருப்பூர் (திருப்பூர்) 13 செ.மீ., வால்பாறை (கோவை), சின்கோனா (கோவை), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) தலா 10 செ.மீ.
மூலனூர் (திருப்பூர்), தாராபுரம் (கிருஷ்ணகிரி), கரூர் பரமத்தி (கரூர்) தலா 9 செ.மீ., வேலூர் (வேலூர்) 8 செ.மீ., கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) சின்னகல்லார் (கோவை) காமாட்சிபுரம் (திண்டுக்கல்) வால்பாறை (கோவை) மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) பொண்ணை அணை (வேலூர்) தலா 7 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஜூலை 24 - தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 25 - தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 26 - அரபிக்கடல், கோவா மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 24 முதல் 28-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.