

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன், சுகாதேவி, முத்துலட்சுமி, முத்து, ராணி, பத்மாவதி, தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், சங்க செயலாளர் பாபு, பொருளாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர், மகாலட்சுமி கல்வி அற’கட்டளை செயலாளர் சந்திரசேகர் மற்றும் வணிகர்கள், பல்வேறு சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, கரோனா தடுப்பு பணிகள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கரோனா தடுப்பு குறித்து அறிவுரைகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை அனைத்து உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளது.
மாவட்டத்தில் காவல்துறையினருக்கு விருப்ப மாறுதல்தான் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் காவல் நிலையங்ககளில் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் குற்றத்தடுப்பு மையம் 24 நேரமும் செயல்பட்டு வருகிறது. குற்றத்தடுப்பு மையம் செல்போன் எண் குறித்து மீண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
காவல்துறை என்பது மக்கள் பணியாகும். காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை வைத்து, அனைவரும் தவறு செய்கிறார்கள் என கூறமுடியாது. உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைத்து காவலர்களும் ஊக்கத்துடன் செயல்படுகின்றனர்.
காவல்துறையினர் தங்களது கடமையை சரியாக செய்து வருகின்றனர். கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார் அவர்.