தூக்கு தண்டனை கூடாது: சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டும் - அரசியல் தலைவர்கள் கருத்து

தூக்கு தண்டனை கூடாது: சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டும் - அரசியல் தலைவர்கள் கருத்து
Updated on
2 min read

தீவிரவாதம், தேசத்துரோக குற்றங்கள் தவிர மற்றவைக்கு தூக்கு தண்டனை தேவையில்லை என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டும். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி:

இந்தியாவில் தூக்கு தண்டனை அவசியமா இல்லையா என்பதை ஆராய, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் பணித்தது. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூட மரண தண்டனை தேவையில்லை என்று அந்த ஆணையத்திடம் கூறியிருந்தார். இந்த சூழலில் தீவிரவாதம், தேச விரோத செயல் போன்ற கடுங்குற்றங்கள் தவிர மற்றவற்றுக்கு தூக்கு தண்டனை அவசியம் இல்லை என்று அந்த ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

“இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் 3 தூக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கூட இப்படியொரு நிலைமை இல்லை” என்று அந்தக்குழு கருத்து தெரிவித்துள்ளது. 1982-ல் மரண தண்டனை ரத்து கூடாது என்ற சட்ட ஆணையம், தற்போது ரத்து செய்யலாம் என்று கூறியுள்ளது. சட்ட ஆணையத்தின் பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும். அதன்படி, இந்தியாவில் மரண தண்டனையே இல்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திமுக எம்.பி. கனிமொழி:

ஒரு வருடத்துக்கு மேலாக நடத்திய ஆலோசனைகள் மற்றும் கருத்துகேட்பு நிகழ்ச்சிகளுக்கு பிறகு மரண தண்டனை தேவையில்லை என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்துக்கு நான் கடந்தாண்டு எழுதிய கடிதத்தில் மரண தண்டனையை முற்றிலுமாக அகற்ற ஆதரவு தெரிவித்திருந்தேன். மரண தண்டனை ஒழிப்பு பற்றி சட்ட ஆணையம் கடந்த ஜூலையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் நான் பங்கெடுத்தேன். இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிரான சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மரண தண்டனையை முற்றிலும் அகற்ற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ஒரு கொலைக்கு இன்னொரு கொலை சரியான தீர்வாக இருக்காது. தூக்கு தண்டனை மனிதர்கள் திருந்த வழி வகுக்காது. தூக்கு தண்டனை நடைமுறையில் இருந்த போதிலும், குற்றங்கள் குறைவில்லை என்ற கருத்தை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான சட்ட ஆணையமும் தெரிவித்துள்ளது. உலகில் 103 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. 50 நாடுகளில் தூக்கு தண்டனை அதிகாரப்பூர்வமற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்ட ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:

பயங்கரவாதம் தேசத்துரோகம் அல்லாத குற்றங் களுக்கு மரண தண்டனை தேவையில்லை என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்களின் நெடுநாள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அதை நாடாளுமன்றத்தில் விவாதித்து, தூக்கு தண்டனையை கைவிட வேண்டும்

இவ்வாறு தலைவர்கள் தங்களது அறிக்கைகளில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in