

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் சுமார் 50 ஸ்தபதிகள் சிற்பங்கள் வடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
கோயில் கட்டுமானங்களுக்கான கல் தூண்கள், சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள் போன்றவற்றை வடிவமைக்கின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் சிலைகள் வடிக்க செங்கோட்டை ஸ்தபதிகளிடம் ஆர்டர் கொடுக்கின்றனர்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக சிலைகள் வடிக்கும் ஸ்தபதிகளின் தொழில் முடங்கிக் கிடக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் நேரத்திலும் நேர்த்தியான கலைப் பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்தபதி சங்கர் ரவி கூறும்போது, “ஓரடி முதல் பல்வேறு அளவுகளில் சுவாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள் வடிவமைக்கிறோம். அளவு, வேலைப்பாடுகளைப் பொருத்து சிலைகளுக்கு விலைகள் வேறுபடும்.
கடந்த 3 தலைமுறையாக சிலைகள் உருவாக்கும் தொழில் செய்து வருகிறோம். கேரள மாநிலத்தில் இருந்து அதிகமானோர் விலைகள் வாங்கிச் செல்கின்றனர். புதிதாக சிலைகள் வடிக்க ஆர்டரும் கொடுக்கின்றனர்.
தமிழகத்துக்குள் விற்கப்படும் சிலைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படும் சிலைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலோக சிலைகளை வார்ப்புகள் மூலம் தத்ரூபமாக உருவாக்கலாம். குறைவான நேரத்தில் அதிகமான சிலைகளையும் வார்ப்புகள் மூலம் உருவாக்கிவிடலாம். ஆனால், கல்லில் சிலைகள் வடிப்பது மிகவும் சிக்கலானது. நேர்த்தியாக சிலைகள் வடிக்க பொறுமை அவசியம். முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்க வேண்டும். எனவே, கல்லில் உருவாக்கப்படும் சிலைகளுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
கரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாமல் ஸ்தபதிகள் சிரமப்படுகின்றனர். வேலை இல்லாத நேரத்தில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக கல்லில் கலைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.
கல்லில் சங்கு, நாதஸ்வரம், சங்கிலி போன்றவற்றை உருவாக்கி வருகிறோம். ஊரடங்கு முடிந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பினால்தான் வழக்கம்போல் ஆர்டர்கள் கிடைக்கும். கற்சிலைகளுக்கு ஜிஎஸ்டியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.