வேடந்தாங்கல் சரணாலயம்; தொழில் நிறுவன விரிவாக்கத்துக்கு அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

வேடந்தாங்கல் சரணாலயம்; தொழில் நிறுவன விரிவாக்கத்துக்கு அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
Updated on
1 min read

வேடந்தாங்கல் சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் ஃபார்மா நிறுவனம் விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும். இந்த சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியைச் சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தச் சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் ஃபார்மா நிறுவனத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய இடம் ஒதுக்கப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் ஃபார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ. என்ற சுற்றுப் பரப்பளவை 3 கிலோ மீட்டராகக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கல் நிலப்பரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in