

காவலர்கள் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தா.பழூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று வரை (ஜூலை 23) 759 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
598 பேர் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 158 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தா.பழூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் (பொறுப்பு), தலைமைக் காவலர், எஸ்எஸ்ஐ ஆகிய மூவருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை 24) உறுதி செய்யப்பட்டது.
இதனால், காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, காவலர் குடியிருப்பில் காவல் நிலைய அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.