

கரோனா காலத்திலும், தமிழகத்திற்கு ரூ.30,000 கோடிக்கு மேல் தொழில் முதலீட்டை ஈர்த்து 29 மாநிலங்களுக்கும் முதல்வர் பழனிசாமி வழிகாட்டியாக திகழ்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரோனா சிகிச்சை பெறும் நோய்களுக்கு அம்மா கிச்சன் மூலம் வழங்கப்படும் உணவை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:
முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரையில் கடந்த 4-ம் தேதி முதல் நாள் தோறும் அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவே மருந்து என்பது போல் இந்த உணவு இருந்ததாக குணமடைந்தவர்கள்வ்முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டி வருகின்றனர்
இந்த நான்கு மாதத்தில் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வண்ணம் முதல்வர் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோரை முதல்வர் நியமித்துள்ளார்.
அது மட்டுமல்லாது உலகமே இந்த நோயின் தாக்கத்தில் தவிக்கும்போது தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திடும் வண்ணம் இந்த நான்கு மாதத்தில் ரூ.30,664 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை முதல்வர் தமிழகத்திற்கு ஈர்த்துள்ளார். இதன்மூலம் 67,222 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளார்.
இப்படி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்து வரும் நமது முதல்வரையும் அவரின் செயல்பாட்டினை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் தீய எண்ணத்தின் வடிவமாக இருக்கும் ஸ்டாலின் கரோனா இறப்பைப் பற்றி பொய்க்கணக்கு என்று அரசியல் உள்நோக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இன்றைக்கு தமிழகம் மட்டும்தான் நாள்தோறும் இந்த தொற்று நோய் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது எதையும் மூடி மறைக்கவில்லை. தமிழக அரசின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டுகின்றனர்.
பொய்க் கணக்கு எழுதுபவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் பொய்க்கணக்கு எழுதி ஊழல் செய்து அதன்மூலம் இந்தியாவிலேயே கலைக்கப்பட்ட ஆட்சி திமுகதான்
தினந்தோறும் அம்மா அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள ஸ்டாலின் யார் யாரையோ கொடுப்பதை வாசித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே வெளியிடுகிறார். ஏட்டுச் சுரைக்காய் வீட்டுக்கு உதவாது. அதுபோல் ஸ்டாலின் அறிக்கை ஒருபோதும் மக்களுக்கு பயன்தராது.
இவ்வாறு அவர் கூறினார்.