கரோனா தொற்று நிலை; திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா தொற்று நிலை; திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

கரோனா பேரிடர் கால அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் முறைகேடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜூலை.27-ம் தேதி நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, திக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து தொற்றைக் கட்டுப்படுத்தி வருகிறது.

தமிழகத் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. சென்னையின் தொற்று எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளன. 3,232 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனாலும் 57 சதவீதத்தினர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக தமிழக அரசு மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவித குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. சென்னை மாநகராட்சி மரண எண்ணிக்கை விட்டுப்போனது குறித்தும், பொது சுகாதாரத்துறை சார்பாக அமைக்கப்பட்ட குழு 444 மரணங்களைப் பட்டியலுடன் இணைத்தது குறித்தும் திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.

கரோனா தொற்று நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் குறித்து திமுக விமர்சித்து வரும் வேளையில் மாவட்டங்களில் தொற்று அதிகரித்துவருவதை ஒட்டி ஆலோசிக்கவும், அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காணொலிக் காட்சி வாயிலாக தோழமைக் கட்சிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டம் நடத்த உள்ளார். ஏற்கெனவே 2 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 3-வது கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 27-7-2020 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெறும். அதிமுக அரசின் கரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்”.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in