

கொடைக்கானல் வனப்பகுதியிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் அத்துமீறி நுழைந்து நடிகர் விமல் மீன் பிடித்த விவகாரத்தில் வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சுற்றுலாவர தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி மற்றும் திரைத்துறையினர் சிலர் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சுற்றுலாவந்து சில தினங்கள் தங்கியுள்ளனர்.
அப்போது அவர்கள் அனுமதியின்றி நுழைய முடியாத பேரிஜம் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன்பிடித்துள்ளனர். இதற்கு வனத்துறையினர் சிலர் உதவிசெய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விமல் மீன்பிடிக்கும் படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து விசாரித்ததில் இவர்கள் அனுமதியின்றி கொடைக்கானல் வந்துசென்றது தெரியவந்தது. சென்னையில் இருந்து இ பாஸ் இன்றி கொடைக்கானல் பயணித்தது. மேலும் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தது என இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து வனப்பகுதிக்குள் நுழைய உடந்தையாக இருந்ததாக பேரிஜம் பகுதியில் வேட்டைத்தடுப்புக் காவலர்களாக பணிபுரிந்த சைமன்பிரபு, செல்வம், அருண் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து கொடைக்கானல் வனத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.