Published : 24 Jul 2020 11:27 AM
Last Updated : 24 Jul 2020 11:27 AM

ஓசூர் அருகே ஆண் யானை உயிரிழப்பு: தந்தங்களை நிலத்தில் புதைத்து வைத்த விவசாயி கைது

அஞ்செட்டி வனச்சரக அலுவலகம் முன்பு யானை தந்தங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன், ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் பிரபு மற்றும் வனத்துறை சிறப்புக் குழுவினர்.

ஓசூர்

ஓசூர் அருகே, உரிகம் வனச்சரகத்தில் ஒரு ஆண் யானை இயற்கையான முறையில் உயிரிழந்தது. இச்சம்பவத்தில் யானையின் 2 தந்தங்களையும் திருடிச் சென்று நிலத்தில் புதைத்து வைத்திருந்த விவசாயியைச் சிறப்பு வனத்துறைக் குழுவினர் கைது செய்தனர். நிலத்தில் புதைக்கப்பட்ட 2 தந்தங்களும் தோண்டி எடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் தமிழக எல்லையில் காவிரி ஆற்றை ஒட்டி உரிகம் வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த உரிகம் வனச்சரகத்தில் பிலிக்கல் காப்புக்காடு, கெஸ்தூர் காப்புக்காடு, தக்கட்டி காப்புக்காடு, மல்லஹள்ளி காப்புக்காடு உள்ளிட்ட காப்புக்காடுகள் உள்ளன.

இவற்றில் பிலிக்கல் காப்புக்காட்டில் கடந்த 16-ம் தேதியன்று யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் கண்டறியப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் இயற்கையான முறையில்சுமார் 20 வயதான ஆண் யானை உயிரிழந்தது என்றும் அதன் இரண்டு தந்தங்களும் மர்ம நபர்களால் உருவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை சார்பில் 3 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் தந்தங்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பிலிக்கல் காப்புக்காடு அருகே ஈரணம்தொட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி தம்மண்ணா என்கிற வீரப்பா (47) என்பவரைச் சிறப்பு வனக்குழுவினர் கைது செய்தனர். விசாரணையில் உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களையும் உருவி எடுத்துச் சென்ற தம்மண்ணா, அதைத் தனது நிலத்தில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விவசாயி தம்மண்ணாவைக் கைது செய்த வனத்துறையினர், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன உயிரினக் காப்பாளர் செ.பிரபு கூறியதாவது:

''ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் உள்ள பிலிக்கல் காப்புக்காட்டில் கடந்த 16-ம் தேதியன்று ஒரு யானை உயிரிழந்தது. உதவி கால்நடை மருத்துவர் குழு மூலமாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இறந்தது சுமார் 20 வயதான ஆண் யானை என்றும், இறப்பிற்கான காரணம் இயற்கையானது என்றும், வேட்டையாடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும், யானையின் இரண்டு தந்தங்களும் அகற்றப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இறந்த யானையின் தந்தங்கள் காணாமல் போனது தொடர்பாக உரிகம் வனச்சரக வன உயிரினக் குற்ற வழக்கு எண். 9/2020, நாள்.16.07.2020 பதிவு செய்யப்பட்டு வனப்பாதுகாப்பு படை, உதவி வனப் பாதுகாவலர் பெ.முனியப்பன் மற்றும் வனப்பாதுகாப்புக் குழு பார்த்தசாரதி, அஞ்செட்டி வனச்சரகர் ரவி, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் 3 சிறப்புக் குழுக்கள் அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பிலிக்கல் அருகே ஈரணம்தொட்டியைச் சேர்ந்த தம்மண்ணா என்பவரைப் பிடித்து விசாரணை செய்யப்பட்டது.

அதில் அவர் யானையின் இரண்டு தந்தங்களையும் தனது பட்டா நிலத்தில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார். யானையின் தந்தங்களும் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினரால் தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு அஞ்செட்டி, உரிகம் வனச்சரக வனப்பணியாளர்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டைத்தடுப்பு முகாம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் ஆடு, மாடு மேய்க்கக் காட்டுப் பகுதிக்குச் செல்பவர்கள், வனம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பிற்கு வனத்துறையினரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு ஓசூர் வனக்கோட்டம் வன உயிரினக் காப்பாளர் செ.பிரபு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x