

கலை, அறிவியல் மற்றும் பொறியில் கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசிற்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர்த்து கலை, அறிவியல் பட்டப்படிப்பு, மற்றும் பொறியியல், பயிலும் மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை தமிழக முதல்வர் அவர்கள் ரத்து செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி கலை, அறிவியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் இளங்கலை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு பயிலும், முதலாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் இளங்கலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து இருக்கும் முடிவு, சரியான நேரத்தில் எடுத்த, சரியான முடிவு.
கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக, பல்வேறு குழப்பத்திலும், பயத்திலும் மக்கள் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், கல்லூரி மாணவர்களின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வில் இருந்து அரசு விலக்கு அளித்து இருப்பது, பெற்றோர்கள், மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும் உயர் கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.