Published : 23 Sep 2015 08:47 AM
Last Updated : 23 Sep 2015 08:47 AM

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா: பேரவையில் முதல்வர் தகவல்

அனைத்து காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்திரராசன் பேசும்போது, ‘‘கடந்த 2-ம் தேதி நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையங்களில் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசிய தாவது:

வேலைநிறுத்த தினத்தன்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருத்தது. ஒரு சங்கத்தைச் சேர்ந்த 65 பேர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில், மறியல் செய்யும் நோக்குடன் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தடுப்புகளை நகர்த்திச் செல்ல முயன்றுள்ளனர். சிதம்பரம் டிஎஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், தரையில் படுத்து அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் வேறு வழியின்றி பலவந்தமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதை வைத்து பாலகிருஷ்ணனை காவல்துறையினர் தாக்கியதாக கூறுவது ஏற்புடையதல்ல. வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் பாலகிருஷ்ணன் உட்பட யாரும் காவல்துறையால் தாக்கப்படவில்லை.

25 சதவீத போராட்டம்

இந்தியாவில் நடக்கும் ஆர்பாட்டங்கள், போராட்டங் களில் சுமார் 25 சதவீதம் தமிழகத்தில் மட்டுமே நடக்கின் றன. ஒரு நாளைக்கு 60 போராட்டங்கள், பேரணிகள், ஆர்பாட் டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில் போலீசார் தடியடி, கண்ணீர் புகை பயன்படுத்துவது ஒட்டுமொத்த இந்தியாவில் 0.5 சதவீதம்தான். இந்த அரசும் காவல்துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.75 கோடியில் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,316 காவல் நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x