

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முன்னாள் விமானப் படை வீரர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே மருதி பட்டியைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் நாகசுந்தரம் (70). அவரது மனைவி விஜயலட்சுமி (61), மகன் வெங்கடேஷ்வரன் (36), மருமகள் கவிதா (32) மற்றும் இரு பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு முகமூடி அணிந்த 7 பேர் வீட்டின் பின்புறச் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து உள்ளே புகுந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற வெங்கடேஷ்வரன் கையில் கத்தியால் குத்தினர். தொடர்ந்து குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். இதனால் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து 25 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தைக் கொள்ளையடித்தனர்.
கொள்ளையர்கள் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்களுடன் இணைத்திருந்த கணினி ஹார்டுடிஸ்க், மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றனர்.
தகவலறிந்த ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், சிவ கங்கை எஸ்பி ரோஹித்நாதன், திருப்பத்தூர் டி.எஸ்.பி அண் ணாதுரை ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்டனர்.கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர் களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்விமங் கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.