Published : 24 Jul 2020 07:09 AM
Last Updated : 24 Jul 2020 07:09 AM

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படுமா?

செங்கல்பட்டு

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்று பரிசோதனைகள் அரசு, தனியார் மருத்துவமனை மற்றும்தனியார் ஆய்வகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இதில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் 2 தினங்களில் உரிய ஆவணங்களுடன் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், அரசுமருத்துவமனையில் மட்டும் முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஆகிறது.

முடிவு தெரிய 4 நாள்

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் தொற்று உறுதியானால் மட்டுமே தகவல் கிடைக்கும். அதுவும்குறைந்தபட்சம் 4 நாட்கள் ஆகும். அதேசமயம் நெகட்டிவ் என்பதை உறுதிசெய்ய பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனைக்குச் சென்றுதான் முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பரிசோதனை எடுப்பதையும், அதன் முடிவுகளையும் இணையத்தில் வெளியிட வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இந்த நடைமுறையை சரிவர பின்பற்றுவதில்லை.

எனவே, தொற்று பரிசோதனை முடிவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இணையத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலரிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x