

கரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தைமனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முறை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை(கோவேக்சின்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக டெல்லி, பிஹார்,ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இறுதிக்கட்ட ஆராய்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் ஆராய்ச்சி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சோதனைக்குவிருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களுக்கு தற்போது மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் ரவிக்குமார் கூறியதாவது:
இந்தியாவில் 12 மருத்துவ மையங்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது. இந்த மருந்தை தற்போது 2 தன்னார்வலர்களுக்கு மட்டுமே செலுத்தியுள்ளோம். அதன்படி, வரும் நாட்களில் 50 பேருக்கு செலுத்தப்பட்டு, 6 மாதங்கள் வரை கண்காணிக்கப்படுவார்கள். இந்த சோதனை தொடங்கிய 3 மாதங்களுக்கு பிறகு,இதன் முன்னேற்றம் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டாக்டர் சத்யஜித் கூறியதாவது: 2-வது ஊசி 14-வது நாளில் செலுத்தப்படும். தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நாள் மட்டும் தன்னார்வலர்கள் சில மணிநேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். மற்றபடி அவர்கள் அன்றாட வேலையை பார்க்கலாம். இந்த தடுப்பூசியானது முதல் நாள் 3 மைக்ரோ அளவு 2-வது முறை 6 மைக்ரோ அளவுவரையிலான மருந்துகள் ஊசிகள் மூலம் செலுத்தப்படும். 28, 42, 104,194-வது நாட்களில் தன்னார்வலர்கள் ரத்த மாதிரிகள் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அதில் இருந்து மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.