Published : 23 Jul 2020 10:32 PM
Last Updated : 23 Jul 2020 10:32 PM

ரூ.1000 மட்டுமே டெபாசிட் கட்டி ஆவின் முகவராக மாறலாம்: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் அழைப்பு 

கோவிட் 19- கரோனா பேரிடர் காலத்தில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி எடுத்துள்ளது. இதற்காக ரூ.1000 மட்டுமே டெபாசிட்டாக வசூலிக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் முதல்வர் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்புத் தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையைத் தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்புத் தொகையாகச் செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (விற்பனை) அவர்களிடம் வைப்புத் தொகையினைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.

இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் வருக வருக”.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x