

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வீரர்கள் நேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மையத்தில், பயிற்சி பெற்று வரும் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, இளம் ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற இளம் ராணுவ வீரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், 230 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 263 பேர் பயிற்சிகளை இந்த மாதம் நிறைவு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 பேரும் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி பரங்கிமலையில் இன்று நடக்கவுள்ளது. இதையொட்டி, பயிற்சி பெற்றவர்களுடன், பயிற்சி அதிகாரிகள் இணைந்து நடத்தும் ராணுவ சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.
குதிரை சாகச நிகழ்ச்சியில், நீண்ட தூரத்துக்கு வேகமாக வந்து நீளம் தாண்டுதல், நெருப்பு வளையத்துக்குள் குதிரையுடன் நுழைந்து செல்லுதல் போன்ற சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், மகாராஷ்டிர மாநிலத்தின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இசை மற்றும் எளிய நடனத்துடன் கூடிய உடற்பயிற்சி சாகசங்களும் நடத்தப்பட்டன. இவர்களுடன் கோமாளி ஆடைகளை அணிந்து கொண்டு 2 பேர் நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் (ஓடிஐ) லெப்டினென்ட் ஜெனரல் ஆர்பி சாஹி, சாகச நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்திய சிறந்த அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தார். இந்த சாகச நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றோரின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள், இளைஞர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கான பயிற்சி மையம்
ராணுவ பயிற்சி மையத்தின் தலைவர் ஜான் ஹென்றி சாமுவேல் நிருபர்களிடம் கூறும்போது, ‘’இந்தியாவில் டேராடூன், சென்னை, கயா ஆகிய 3 இடங்களில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்படுகிறது. இவற்றில், சென்னையில் மட்டும்தான் பெண்களுக்கு என சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது மொத்தம் 236 பேர் ராணுவ அதிகாரிகளாக பயிற்சி பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் இது 100-வது குழுவாகும் (பேட்ச்), பெண்கள் பிரிவில் 14-வது பிரிவாகும். இங்கு ராணுவ அதிகாரிகளுக்கான குதிரை சாகசம், தற்காப்பு, ஆயுதங்களை கையாளுதல், ராணுவ கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை நிறைவு செய்துள்ளவர்களுக்கு இன்று அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன’’என்றார்.