

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளது கரோனா வைரஸ் தாக்கம்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழக அளவில் கரோனா பாதிப்பில் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 14 பேர் குழந்தைகள் என்பதும், 9 பேர் கர்ப்பிணிகள் என்பதும் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,767 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,493 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,237 பேர் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.